இந்திய வேளோண் ஆராய்ச்சி கவுன்சில் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து, வறட்சியை தாங்கக்கூடிய தன்மை, பருவநிலை மாற்றம் தாங்கும் திறன் போன்ற பல சிறப்பு பண்புகளைக் கொண்ட 35 பயிர்வகைகளை அறிமுகப்படுத்தினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்த பயிர் வகைகளை உருவாக்கியது. இதில் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருது வழங்கினார். புதுமையான முறைகள் மூலம் விளைச்சலை பெருக்கிய விவசாயிகளுடன் உரையாடினார். இவர்களில் 2 பெண் விவசாயிகளும் அடங்குவர். அப்போது அவர், ‘பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகச் சூழலுக்கும் பெரிய சவாலாக உள்ளது. மீன்வளத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதியவகை பூச்சிகள், நோய்கள், தொற்று நோய்கள் வருகின்றன. இதை தவிர்க்க தீவிர ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். விஞ்ஞானம், அரசு, சமூகம் இணைந்து செயல்பட்டால் நல்ல விளைவுகள் ஏற்படும்’ என தெரிவித்தார்.