தெற்கு ரயில்வே சேமித்த ரூ. 377 கோடி

ரயில்வேதுறை வரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் தெற்கு ரயில்வே பிரிவும் சுற்றுச் சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மின் சிக்கனம், கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம், மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தியதால், 2020 – 2021 நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவை குறைந்துள்ளது. பசுமை ரயில் நிலையத்துக்கு, இந்திய பசுமை கட்டட கௌன்சில் வழங்கும் ‘பிளாட்டினம்’ விருது கோவை ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பசுமை ரயில் நிலைய விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை ஆற்றல் சேமிப்பு சான்றிதழை பெற்றுள்ளது. இதைத்தவிர, சென்னை தண்டையார்பேட்டை, ராயபுரம், அரக்கோணம், ஈரோடு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள, டீசல் லோகோ பணிமனைகளுக்கு ‘ஐ.எஸ்.ஓ 50001’ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் இன்ஜின் இயக்கம் 568 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின்கள் 340ல் இருந்து 120 ஆக குறைக்கப்பட்டுள்ளன.