பயங்கரவாதி குறித்த சில தகவல்கள்

மங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய முஸ்லிம் பயங்கரவாதி ஷாரிக் பற்றி சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலவரம் உருவாக்கியவன்: இந்த பயங்கரவாதி ஷாரிக், ‘ஆங்கிலேயர்களிடம் இருந்து பாரதத்துக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நிஜமான சுதந்திரம் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு முழு சுதந்திர கிடைத்திட வேண்டும்’ என்று கூறி நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று வந்தவன். 2 வருடங்களுக்கு முன்பு அவர் மங்களூருவில் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் இடையே கலவரம் உருவாகும் வகையில் சுவர்களில் கருத்துக்களை எழுதியவன். இதையடுத்து அவனை காவலர்கள் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தான். இவனுடன் சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ் முனீர் ஆகிய பயங்கரவாதிகள் கூட்டாளிகளாக செயல்பட்டனர். மெசஞ்சர் செயலி மூலம் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீடியோக்களை பார்த்து வந்தனர். அதேபோல பாரதத்திலும் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டனர். பின்னர் இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான கட்டுரைகள், தகவல்கள் ஆகியவற்றை தங்களது பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிபயங்கர வீடியோக்களான தலை துண்டித்தல், கொடூரமாக கொலை செய்தல் போன்ற வீடியோக்களையும் அடிக்கடி பார்த்து வந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான சேனல்களில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

வெடிகுண்டு தயாரிப்பு: இதில் யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்க் படித்தவன். மாஸ் முனீர் மெக்கானிக் என்ஜினீயர். இவர்கள் இருவரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனர். இதற்கு தேவைப்படும் ரிலே சர்க்கியூட் போர்டு, டைமர் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார். இதற்கு தேவைப்பட்ட அலுமினியம் பவுடர்அவர்களுக்கு  கிடைக்கவில்லை. எனினும் அவர்கள் வெடிகுண்டு ஒன்றை தயாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 15ம் தேதி துங்கா நதிக்கரையோரம் ஒரு தோட்டத்தில் வைத்து வெடிக்கச்செய்து பயிற்சி பெற்றனர். அதை அவர்கள் தங்களது அலைபேசிகளில் வீடியோ எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் பாரத தேசியை கொடியையும் தீயிட்டு எரித்து வீடியோ எடுத்தனர். இந்த திட்டங்களுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டுள்ளான். இதுபற்றி அறிந்த காவலர்கள் அவர்களை தேட தொடங்கினர். மூவரும் பெங்களூரு, மும்பை, கோவா ஆகிய பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் மீண்டும் சிவமொக்காவுக்கு திரும்பினர்.

ஹிந்து அமைப்பினர் மீது தாக்குதல்: சமீபத்தில் வீரசாவர்க்கர் உருவப்படம் அடங்கிய பேனரை அகற்றிய விவகாரத்தில் வன்முறை ஏற்பட்டபோது இந்த மூவரும் ஹிந்து அமைப்பு பிரமுகரான பிரேம்சிங் என்பவரை தாக்கினர். இவ்வழக்கில் யாசின், முனீர் சிக்கினர். ஆனால் ஷாரிக் மட்டும் தலைமறைவானான். இந்நிலையில்தான் தர்போது மங்களூருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த நபர் குறித்து காவலர்கள் நடத்திய விசாரணையில் அவன் தலைமறைவாக இருந்த ஷாரிக் என தெரியவந்தது. ஷாரிக்கின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் இது உறுதியானது. ஷாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதால் அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி ஆதார்: மைசூருவில், பயங்கரவாதி தங்கியிருந்த வாடகை வீட்டில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பல பொருட்கள் சிக்கியது. மோகன்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அந்த பயங்கரவாதி வாடகைக்கு தங்கி இருந்துள்ளான். ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு குடிவந்தான், இதுவரை வாடகையும் கொடுக்கவில்லை. வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது, போலி ஆதார் கார்டை கொடுத்துள்ளான். தான் வியாபாரம் செய்வதாக கூறியுள்ளான். குண்டு வெடிப்பு தினத்தன்று, தன்னுடன் தங்கி இருந்த பாபுராமிடம், தான் பெங்களூருவுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்ற அவன், மைசூருவில் இருந்து மங்களூருவுக்கு பேருந்து மூலம் வந்து, அங்கிருந்து படீல் பகுதிக்கு டவுன் பஸ்சில் வந்துள்ளான். அங்கிருந்து பம்ப்வெல் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்து வந்துள்ளான்.அவன் பயன்படுத்திய சிம் கார்டு, ஊட்டியை சேர்ந்த குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் ஆதாரை பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

தொடர்புகளை கண்டுபிடிப்போம்: இதைண்டையே, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “காயமடைந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் வெடிகுண்டுக்கு பயன்படுத்தியவை எல்.இ.டி. வெடி பொருட்கள் என்று தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். காயம் அடைந்த அந்த நபரின் கிடைத்த ஆதார் போலியானது என்று தெரியவந்துள்ளது. அவனது பின்புலம் குறித்து காவலர்கள் பல்வேறு உண்மை தகவல்களை திரட்டினர். இதன் மூலம் இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று தெரியவந்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பினர் மங்களூரு வந்துள்ளனர். கர்நாடக காவல்துறையுடன் இணைந்து அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளியே வரும். இதன் பின்னணியில் உள்ள பெரிய தொடர்புகளை கண்டுபிடிப்போம்” என்று கூறினார்.இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக பயங்கரவாதியுடன் தொடர்புடையவர்கள், அவன் தங்கியிருந்த கோவை, மதுரை மற்றும் கேரளாவில் உள்ள அவனது தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு விரைவில் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.