விவசாயம், சுற்றுச்சூழல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள் அணிதிரண்டு வித்தியாசமானதொரு விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கியுள்ளன. மண்ணின் சத்துக்களை கட்டிக்காத்து வலுப்படுத்தி செழுமை சேர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இயக்கத்தின் நோக்கம். பூமித்தாயை பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வு கொள்வீர் என்னும் சேதியை மக்கள் மனதில் பதிய வைப்பது குறிக்கோள்.
பூமி சுபோஷண் / சம்ரக்ஷண் அபியான் இயக்கம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு நெடுக செயல்படும். ஏப்ரல் 13ம் தேதி அன்று தொடங்கி மூன்று மாத காலம் முதல் கட்டமாக நடைபெற உள்ள இந்த இயக்கத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் சிங் பட்டிதார் பொறுப்பேற்றுள்ளார். மண்ணிடம் பரிவு காட்டும் அணுகு முறையை நமது வேர் களிலிருந்தே கண்டறிய இது ஒரு வாய்ப்பு. பாரதிய விவசாய அணுகு முறையின் படி விளை நிலம் என்பது நமக்குத் தேவையான எல்லாவற்றையும் அள்ளி வழங்கும் உயிர்ப்புள்ள ஜீவன்.
அதற்கு கைமாறாக நாம் மண்ணைப் பொன்னே போல்போற்றி வரவேண்டும். மண்ணுக்குப் புத்துயிர் தர வேண்டும். “மாதா பூமிஹி புத்ர அஹம் பிருத்வியாஹா” என்ற தொன்மையான வேதவாக்கு மண்ணுடன் நமக்குள்ள புனிதமான பந்தத்தைத் தாய் சேய் உறவாக வர்ணிக்கிறது. மண்ணுக்கு நன்கு ஊட்டம் தந்து போற்றிப் பாதுகாப்பது என்ற இந்த இயக்கத்தின் கருத்து அந்த தொன்மையான பாரத விவசாய சிந்தனையில் வேர் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மண் குறித்த இந்த அணுகுமுறை பற்றிய கலந்துரையாடல்கள் / கருத்தரங்குகள் / பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
அதன் விளைவாக 33 அமைப்புகளின் கூட்டு முயற்சியாக பூமி சுபோஷண் / சம்ரக்ஷண் இயக்கம் உருவாயிற்று. மண்ணைக் காப்பது நம் கடமை என்ற உணர்வு ஏற்படுத்துவதுடன் அதன் அவசியத்தை வலியுறுத்துவதும் இயக்கம் ஏற்றெடுத்துள்ள பணி. மண்ணுக்கு நல்ல ஊட்டம் தர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் விவசாய அன்பர்களின் வயல் தான் பணிக்களம். நகர்ப்புறங்களில் தொகுப்பு குடியிருப்புகளில் மக்கும் குப்பையை கம்போசிட் உரம் ஆக்குவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.
அறவழி காட்டும் ஆன்றோர் அணி ஒன்று இயக்கத்திற்கு வழிகாட்டும். விவசாயிகளைக் கொண்ட பணிக்குழு ரசாயனம் கலக்காத விவசாயம் என்ற பாரதிய அணுகுமுறையை முன்னெடுக்கும்.
நன்றி ஆர்கனைசர், தமிழில்: முனைவர் ம.ஜெயராமன்