சின்னஞ்சிறு வீடுகளுடன் அமெரிக்கா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 40 சிறிய வீடுகளைக் கொண்ட வண்ணமயமான கிராமம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும், 6 சதுர மீட்டர்கள் கொண்டதாக ஒன்று அல்லது இரண்டு நபர்கள் வசிக்கக் கூடியதாக அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. ‘சான்ட்லர் பவுல்வர்டு பிரிட்ஜ் ஹோம் வில்லேஜ்’ என பெயரிடப்பட்ட இந்த கிராமத்தை லெஹ்ரர் கட்டிடக் கலைஞர்களும் நகரின் பொறியியல் பணியகக் குழுவினரும் 13 வாரங்களில் வடிவமைத்து கட்டியுள்ளனர். வீடற்ற மக்களுக்கு தங்குமிடம் வழங்குவதில் இது புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு சிறிய வீட்டிலும் இரண்டு படுக்கைகள், வெப்பமூட்டி, ஏர் கண்டிஷனிங் வைப்பதற்கான வசதிகள், ஜன்னல்கள், ஒரு சிறிய மேசை போன்றவை உள்ளன, அங்கு குடியிருப்பவர்கள் கூட்டாக உணவு சமைக்க, உண்ண தனியிடங்கள், செல்லப்பிராணி  வளர்பிடங்கள், விளையாட்டு பகுதிகள், ஓய்வறை, சலவை நிலையம் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இங்கு வசிப்பவர்களுக்காக வழக்கு மேலாண்மை, வீட்டு வழிகாட்டிகள், மனநல மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு சேவைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.