திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லட்சுமிபுரம் பகுதியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தாளாளர் சிந்தை ஜெயராமன். இவரது மகன் வினோத் தான் தற்போது பள்ளியை நிர்வகித்து வருகிறார். இவர் அந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை, கவுன்சிலிங் என்கிற பெயரில் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல, பல ஆசிரியையைகளிடமும் வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. வீட்டிற்குச் சென்ற மாணவ, மாணவிகள் வினோத்தின் பாலியல் சீண்டல் குறித்து தங்களது பெற்றோரிடம் கூறினர். இதைத் தொடர்ந்து, பள்ளியை முற்றுகையிட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளித் நிர்வாகி வினோத்தை கைது செய்யக்கோரி பள்ளி வளாகத்திலேயே மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், இது தொடர்பாக மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாகவே காவல்துறையினர் பேசினர். இதனால், பெற்றோர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மாணவர்கள் சிலரை காவலர்கள் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். இதன் பிறகே பெற்றோர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமறைவாக உள்ள வினோத் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை காவல்துறை தேடி வருகிறது. வினோத்தின் தந்தையும், பள்ளியின் தாளாளருமான சிந்தை ஜெயராமனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வினோத்தை கைது செய்யும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.