திருச்சி மாவட்டம், திருவானைக்காவலைச் சேர்ந்த முதிய தம்பதி காசி விஸ்வநாதன் (89) – ஆனந்தி (78). இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு புட்லூரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மருத்துவமனையில் சேர்ந்த மூன்றாவது நாளே ஆனந்தி உயிரிழந்தார். கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆனந்தியின் ஈமச் சடங்குகளை சேவாபாரதி காரியகர்த்தர்கள் தாங்களே முன்வந்து நிறைவேற்றினர். மேலும் காவிரி நதியில் அவரது அஸ்தியை கரைத்து வாரிசுகள் இல்லாத தம்பதிக்கு தாங்களே மைந்தர்களாக மாறினர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி (84). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அவரது மகன். ஆனால் சகுந்தலாதேவியின் ஆக்ஸிஜன் அளவு 85ஆக இருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து, அவரது மகனும் கைவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் மூன்று மருத்துவமனைகளிலும் சகுந்தலா தேவியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். பிறகு சேவாபாரதி கார்யகர்த்தர்கள் முயற்சி எடுத்ததன் பேரில், தற்போது பூரண குணமடைந்துவிட்டார் சகுந்தலாதேவி. ‘‘என் மகனும் கணவரும் என்னை கைவிட்டு விட்ட நிலையில், யாரென்றே தெரியாத சேவாபாரதி பொறுப்பாளர்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்பான் என்று உருக்கமாக ஆசீர்வதித்தார் சகுந்தலா தேவி.
தூத்துக்குடி மாவட்டம், வடக்கு சோட்டைன்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சேவாபாரதி பொறுப்பாளர், தனது தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து அவர்களை கவனித்து கொள்ள சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரின் நெருங்கிய உறவினரே மருத்துவர் என்ற போதும் சிகிச்சை அளிக்க முன்வராமல் இருப்பதை கண்டு வருத்தம் அடைந்தார். எனினும், சென்னையில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அனுபவத்தால் தாயாரை தைரியப்படுத்தி, அரவணைத்து பார்த்து கொள்ள முடிவு செய்தார்.
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய பின்தான் தாயார் மட்டுமல்லாது தெருவில் மொத்தம் 15 நபர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இந்தக் கிராமத்தில் 600 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் கொரோனா தொற்றைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்தாலும் அச்ச
மடைந்து காணப்பட்டனர். நமது சகோதரி களத்தில் இறங்கினார். தினமும் காலையில் கபசுர குடிநீர் தயாரித்து ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அளித்துள்ளார். தேவைப்படுவோருக்கு உணவும் சமைத்து அளித்துள்ளார். தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்; அது மற்றவர்களுக்கு பாதுகாப்பு என்பதைப் புரியவைத்து அச்சத்தைப் போக்கி, அத்தனை பேரும் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடையும்வரை தொடர்ந்து சேவை செய்துள்ளார். அதனால், மற்ற குடும்பங்களும் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். கிராம மக்கள் நமது சகோதரியை மட்டுமல்லாது, சங்கம் – சேவாபாரதியின்சேவையை அவர் தனது கிராமத்திற்கும் அளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
தொகுப்பு : ராமநாதன், காஞ்சனமாலா