போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு சேவா இன்டர்நேஷனல் என்ற தொண்டு அமைப்பு உதவி வருகிறது. அங்கு கடுமையான ஷெல் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர். அவர்கள் பாரதத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து உதவிகளை செய்துள்ளனர். இவர்களால் பலனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேல். இவர்கள் பாரதத்தின் மாணவர்களுக்கு மட்டும் அங்கு உதவி செய்யவில்லை. மாறாக, உக்ரைனில் உள்ள பல வெளிநாட்டினருக்கும் கூட தங்களின் உதவிக்கரத்தை நீட்டியுள்ளனர். அவ்வகையில் நமீபியா, சாம்பியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 367 மாணவர்களுக்கும் 100 ஆப்பிரிக்க மாணவர்களுக்கும் உதவுமாறு நைஜீரியாவின் தூதர் ஷினா அலிகா சேவா அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து போர் மிகக் கடுமையாக நடந்து வரும் உக்ரைனின் சுமி பகுதியில் இருந்து 470க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மாணவர்களை சேவா இன்டர்நேஷனல் தொண்டர்கள் காப்பாற்றி வெளியேற்றியுள்ளனர். இந்த வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைக்கு நைஜீரியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெஃப்ரி ஒன்யாமா சேவா இன்டர்நேஷனலுக்கு நன்றி தெரிவித்தார். அவர் சேவா தன்னார்வலர்களின் அற்புதமான ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பு, உதவியை பாராட்டியுள்ளார். ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் (HSS) தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்தே சேவா இன்டர்நேஷனல் இந்த சேவைப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.