விசாரணையில் ஆஜராகாமல் சஞ்சய் ராவத் .நழுவல்

சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு நேற்று ஆஜராகவில்லை. மும்பையில் குடியிருப்பு மேம்பாடு தொடர்பான 1,034 கோடி ரூபாய் நில முறைகேடு வழக்கில், பிரவின் ராவத் என்பவர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவர், சஞ்சய் ராவத்தின் பினாமியாகச் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதையடுத்து, சஞ்சய் ராவத், அவரது மனைவி வர்ஷா ராவத் வாங்கியுள்ள பல குடியிருப்புகளில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் வர்ஷா ராவத் உள்ளிட்ட மூவரின், 11 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்த வழக்கில், நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதால், அடுத்த மாதம் ஆஜராவதாக, தன் வழக்கறிஞர்கள் வாயிலாக அமலாக்கத் துறையிடம் சஞ்சய் ராவத் மனு அளித்துள்ளார். இதையடுத்து, வரும் 27ல் ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதே வழக்கில், இம்மாத துவக்கத்தில் சஞ்சய் ராவத் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜரானார். 10 மணி நேரம் நடந்த இந்த விசாரணைக்குப் பின், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.