கோயில் நிலத்தில் உப்பளம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘குளத்தூர் பகுதியில் குழந்தை விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 49.60 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதனை அரசு, உப்பளமாக மாற்ற உள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தை வணிக பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது. உப்பளமாக மாற்றுவதற்கு எதிராக, கிராம ஊராட்சியும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால், உப்பள உற்பத்திக்கான ஏல அறிவிப்பை ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. ஒரு விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய ஆட்சியர், நகர் ஊரமைப்புத்துறையின் அனுமதித் தேவை. ஆனால் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. உப்பளத்திற்கான ஏல அறிவிப்பினையும் ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். இம்மனுவினை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் தற்போது எந்த நிலையில் இருக்கிறதோ அதே நிலையே தொடர வேண்டும் என கூறியதுடன் ஆட்சியர், அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர்.