மகான்கள் பார்வையில் மங்கையர்

பாரத மக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவே கானந்தருக்கும் பெரிதும் கடன்பட்டவர்கள். அதிலும் பாரதப் பெண்மணிகள் மிகமிகக் கடன்பட்டவர்கள். ‘சுவாமி’ என்று உலகத்தவராலும், ‘வீரத்துறவி’ என்று அறிஞர்களாலும், ‘பகவான்’ என்று பாரதி யாராலும் அழைக்கப்படும் விவேகானந்த மகராஜ், பாரதம் பெற்ற அற்புத மகான். தேசியம் + தெய்வீகம், பாரதப் பண்பாடு + உலகளாவிய பார்வை, சனாதன தர்மப் பிடிப்பு + புதுமை நோக்கு, வீரம் + விவேகம்; இப்படிப்பட்ட அரிய கலவையை சுவாமிக்குள் உலகு கண்டது.மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும்தான் என்பதை இந்தியச் சான்றோர்கள் உணர்ந்தனர். அதனால்தான் ஆண் – பெண் பாகுபாடோ, மதம் – சாதி வேறுபாடோ கூடாது என்பதை வலியுறுத்தினர். அதில் சுவாமிஜியின் பார்வை அற்புதமானது, முதன்மையானது. மகாகவி பாரதிக்கு சகோதரி நிவேதிதையின் மூலமாக சுவாமிஜியின் தாக்கம் ஏற்பட்டது.
சுவாமிஜியின் கருத்துகளை அதிலும், பெண்விடுதலை, பெண் கல்வி ஆகியவற்றைப் பற்றிய எண்ணங்களைத் தன் கவிதைகளுள் பாரதி பாடினார். ”சுவாமிஜியின் சிஷ்ய ரத்தினங்களுள் சிறப்பானவர் சகோதரி நிவேதிதை” என்றார் பாரதி. அரக்க குலத்தில் தசமுகனின் தம்பியாகப் பிறந்தாலும் ராமனுக்குத் துணை நின்ற விபீஷணனைப்போல், வெள்ளைக்கார இனத்தில் தோன்றினாலும் சுவாமிஜிக்கும் இந்திய விடுதலை எழுச்சிக்கும் உதவி செய்தார்” என்றார் மகாகவி.

தாக்கம்
1906ல் கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் நிவேதிதா என்ற அன்புருவைப் பாரதி சந்தித்துப் பேசினார். நிவேதிதா என்ற நோபிள், ”உமக்குத் திருமணமாகிவிட்டதா?” என்றார். ”ஆம், மணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள்” என்றார் பாரதி. ”இம்மாநாட்டிற்கு உங்கள் மனைவியை ஏன் அழைத்து வரவில்லை? விடுதலை உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?” இது நிவேதிதையின் அழுத்தமான கேள்வி.
”எங்கள் சமூகத்தில் மனைவியைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கமில்லை” என்றார் பாரதியார். ”உங்களில் பாதி (பெட்டர் ஹஃப்) மனைவி. அந்தப் பாதியை அடிமைப்படுத்தி விட்டு, மறுபாதியான நீங்கள் உரிமை கேட்பது என்ன நியாயம்? உங்கள் மனைவிக்கு முதலில் சுதந்திரம் தாருங்கள். நீங்கள் தனி, அவள் தனி என நினைக்காது உங்களின் பிரிக்க முடியாத பாதி, தேவி என நினைத்துப் போற்றுங்கள்” என்ற நிவேதிதையின் அறிவுரை சுவாமிஜியின் எதிரொலியே! சமுதாயம் ஒரு பறவையைப் போன்றது. அதன் இரண்டு சிறகுகள் ஆணும் பெண்ணும். ஒரு சிறகு சரியில்லை எனில் பறவை எப்படிப்பறக்கும் என்ற சுவாமிஜியின் அழகிய அருளுரை பாரதி வாக்கில் பாடல் ஆகிறது:
மண்ணுக்குள் எவ்வுயிரும்
தெய்வம் என்றால்
மனையாளும் தெய்வம் அன்றோ
பெண்ணுக்கு விடுதலை
நீர் இல்லை என்றால்
பின் இந்த உலகினில்
வாழ்க்கை இல்லை.
பாரதியார் தனது ‘சுதேச கீதங்கள்’ நூலை மாதாவின் மெய்த்தொண்டின் தன்மையையும் துறவின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணி சுவாமிஜியின் தர்ம புத்திரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பணம் செய்தார்.

சுவாமி விவேகானந்தர்
பெண்களுக்கு உரைத்தவை
”நாடு எத்தனையோ ராமர்களைக் காணலாம். ஆனால், ஒரு தூய அன்னை சாரதா தேவியைக் காண்பது அரிது” என்றார் சுவாமி. ”ஆன்ம சக்தி மிக்கவர் பெண்களே! லட்சியங்கள் கொண்ட பெண்களே! பொறுமைமிக்க பெண்களே! உங்களால் நாட்டின் கலாச்சாரம் படைக்கப்பட்டு, சிறப்பாக்கப்படுகிறது” என்றார் வீரத்துறவி.
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்தல் ஆகும்.
-என்ற பாரதி பாடல் கீழுள்ள குறளின் வழிமொழிதல்,
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (குறள் 58)
மனைவியும் கணவனுக்குக் கடவுளின் அம்சமே. எல்லா உயிரும் தெய்வமே என்ற அத்வைத நிலையைக் குருதேவர் உணர்த்தினார். வங்காளத்தில் துர்க்கா பூஜை நடைபெறுவது சிறப்பு. அன்னை சாரதா தேவியைக் காளியாகப் பாவித்துப் பூஜை செய்தார் குருதேவர்.

ஆஞ்சநேயரைப்போல
மாதரை வேறு கோணத்தில் நலத்தை மனதாலும் நினைக்காதவர், நைஷ்டிகப் பிரம்மசாரி அனுமனைப் போன்றவர் சுவாமிஜி. அமெரிக்க நாட்டில், பணக்கார இளம் விதவை ஒருத்தி, ”சுவாமி என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வறுமை ஓடிவிடும். சீமானாக வாழலாம். உங்களைப்போல் வீரம், அறிவு, ஞானம், உடல்பலம் கொண்ட மகனை நான் பெறவேண்டும்” என்றாளாம். அவள் காலில் பணிந்து, ”தாயே! என்னையே உம் மகனாக ஏற்றருள்வீர்” என்றாராம் வீரத்துறவி. பிற பெண்ணைத் தாயாகப் பாவிக்கும் மனநிலை ஆடவரிடம் வந்துவிட்டால் மனைவிக்கு அதைவிட வேறு பேறு என்ன?

பெண்மையின் மூன்று லட்சியங்கள்
சகதர்மிணி லட்சியம்
தாய்மை லட்சியம்
பிரம்மவாதினி லட்சியம்
கணவன் செய்யும் தர்மத்தை உடனிருந்து காப்பவள் சகதர்மிணி. யக்ஞவல்யருக்கு வாய்த்த காத்யாயணி போன்றும், அத்ரிக்கு வாய்த்த அநுசூயைப் போன்றும், சத்யவானுக்கு வாய்த்த சாவித்திரி போன்றும் பெண்கள் சகதர்மிணியாகத் திகழவேண்டும். பொறுமை, தூய்மை, புனிதம், கற்பு எனச் சொல்லும் அனைத்தின் வடிவமாகவும் சீதாதேவி திகழ்ந்தாள். லட்சியப் பாரதப் பெண்மை அது என்கிறது விவேக முரசு. தாய்மை தன்னலமற்றது. தியாகம் செய்வது, ஆழம்காண முடியாதது. குறை காண முடியாத தூய்மை நிறைந்தது. தாயே முதல் குரு. ஜீஜா பாய், ஜான்சி ராணி, சாந்த்பீபி போன்ற வீரப் பெண்மணிகள் வீரத்தாய்மார்களாக வீரப்புதல்வர்களை நாட்டுக்கு அளித்தார்கள். புறநானூற்று வீரத்தாய்மார்கள் வீரத்தமிழர்களை உருவாக்கினர்.
கருவினில் வளரும் மழலையின் உயிரில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
என்றார் கண்ணதாசன்.
”என் தாயின் விரதம், பிரார்த்தனை, என்னை நன்மகனாக உருவாக்கியது” என்றார் சுவாமி.
பிரம்மவாதினியாவது மணம் புரியாமல்,
உயர் வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பெண்கள், கல்விப்பணி, முதியோர்ப் பேணல், மனித குல சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். கார்க்கி போன்ற வேதகால மகளிர், பைரவி, பிராம்மணி போன்ற குருதேவரின் சிஷ்யைகள் இத்தகைய உயர் பெண்மணிகள். அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர் அன்னையின் கோயிலைப் பார்த்து ‘ஆன்மிக வழிகாட்டியாக ஒரு பெண்ணா’ என்று வியந்தார்.

பெண் கல்வி
பெண்களுக்குக் கல்வி தேவை என்று பாரதத்தில் முதல் குரல் கொடுத்தவர் சுவாமிஜி. தபஸ்வினி மாதாஜிதான் மாகாளி
பாடசாலையைப் பெண்களுக்காக நடத்தினார். (இவர் தமிழ்ப் பெண்மணி. வேலூரில் வாழ்ந்த மகாராஷ்டிர இனத்தவர். வீரப் போரும் புரிந்தவர். பின் தவ வாழ்க்கைக்கு வந்தார்). இந்தப் பள்ளியையும், இந்தப் பெண்களுக்கு அளிக்கப்படும் பண்பாட்டுக் கல்வியையும் போற்றினார் விவேகானந்த மகராஜ்.
”சக்தி வடிவான பெண்ணுக்குக் கல்விக் கண் திறத்தல் அவசியம். அவளுக்குப் பெருமை, உரிமை தராத நாடு கடவுளின் சாபம் பெறும். புனித அன்னையைப் பகவானின் மறைவுக்குப்பின் விதவை எனப் பார்ப்பது மூடத்தனம். அவள் மகாசக்தி என்றார்” சுவாமிஜி. நிவேதிதா அன்னையும் மகளிர் பள்ளி தொடங்கினார்.

பெண்களே
பாரதப் புத்திரிகளே! பகவானும் சுவாமியும், தூய அன்னையும் பிறந்த நாட்டின் கண்களே! அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புற அழகு என்றாவது அழியும். ஆற்றல்மிக்க பாரத சக்தியாக விளங்கி, நல்லின சிங்கங்களை ஈன்று தருக. இனிமையும், ஒழுக்கமும் காத்து இல்லற தர்மம் பேணுக. ஈடிலாச் சக்தி நீங்கள்! உண்மை, ஊக்கம் உங்களிடம் தங்குவதாக. ஒப்பிலாத சமுதாயத்தின் ஒருபாதி பெண்கள் என்பதை எல்லாம் நமக்குரைத்த நல்லோர்களை வழிபட்டு, நாளும் நலமாக வாழ்வோம்.