மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல்

ஆள் பாதி ஆடை பாதி‘ என்ற பழமொழியை எல்லாரும் கேட்டிருப்போம். எண்ணி நான்கு சொற்களில் வெறும் ஆடை மட்டுமல்ல, எந்த மாதிரியான ஆடை என்பதும், அது மனிதரின் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதையும் காட்டுகிறது. உடைகள் என்பது வெறுமனே பாதுகாப்புக்காக மட்டுமல்ல, மானத்தை மறைக்கவும் பயன்படுகிறது. தவிர, மனிதரின் சுயத்தன்மை, அழகு, நாகரிகம், பண்டிகைகள், விசேஷங்கள், பார்க்கும் தொழில், வேலைகளைக்கூடப் பிரதிபலிக்கிறது.

இன்னும் ஆராய்ந்தால் மதத்தினர், இனத்தவர்களைக்கூட அடையாளம் காட்டுகிறது. தன்னம்பிக்கை, வண்ணத்தின் மீதுள்ள ஈடுபாடு, வடிவமைப்பு போன்றவற்றையும் காண்பிக்கிறது. இவ்வளவு விளக்கங்களை நான்கு சொற்களில் பெரியவர்கள் அடக்கி விட்டார்கள்! விஞ்ஞானமும், உளவியலும் கூறுகிறது ஆடை என்பது நமது பழகும் தன்மை, சுபாவம், அணுகுமுறை, ஆளுமை, மன நிலை, தன்னம்பிக்கை எல்லாவற்றையும் காண்பிக்கிறது என்று. சிலசமயம் மற்றவரோடு பழகும் விதத்தைக் கூட மனதளவில் மாற்றிவிடுகிறது.

ஆனால், இன்றைய கவலை ஆடைகளை எப்படி அணிவது, எந்த மாதிரி ஆடைகளை அணிவது என்பதே. பொருத்தமாக ஆடை அணிவது என்பதே இந்த சிந்தனையின் கரு. பொருத்தமாக என்னும் சொல் இடத்துக்கேற்றாற்போல மாறும் என்பது உண்மையாக இருந்தாலும், அடிப்படையில் மாறாத விஷயங்கள் என சில உள்ளன. பொருத்தமாக, செளகரியமாக, நிகழ்ச்சிக்கு ஏற்றாற்போல, உடல்வாகுக்கு ஏற்றாற்போல இருப்பதே அது. பெண்கள் எப்படி உடையணிவது என்பது பற்றி மட்டுமே எல்லாரும் பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு கருத்தை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று, ஆணா திக்க சமூகம் பெண்கள் எப்படி உடை அணிவது என்பதற்கு வரையறைகள் வகுத்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் இந்த விஷயத்தில் பெரும் தளர்வுகளை தாண்டி மனம்போன போக்கில், என்றுள்ளது.

இரண்டாவது கோணம், ஆண்களின் மனநிலையை அறிந்து, ஆண்களால்தான் பெண்களுக்கு பாதிப்பு என்பதால், பெண்கள் எப்படி உடையணிந்தால் பாதுகாப்பு என்று ஆண்களை மையப்படுத்தி வரையறை செய்துள்ளார்கள். பாரதிய கலாச்சாரத்தில் இதில் மிகப்பெரும் தெளிவு உள்ளது எனவும் கூறலாம். சேலைக்கென்று ஒரு தனி மரியாதை, அழகு, வசீகரம் உள்ளது. சுடிதார் உடையில் ஒழுக்கம், வசதி, பெண்மை உள்ளது. வேலைக்குச் செல்லும்போது சுடிதார் ஏற்றது. அதிலுள்ள துப்பட்டா வெறும் மாராப்பு மட்டுமல்ல, ஆயுதமும்கூட என்பது பலர் அறியாதது. வசதி, நடைமுறை அம்சங்கள் ஆடைகளின் பிற முக்கிய அம்சங்களாகும். பெண்களின் உடை விஷயத்தில் முற்போக்கான சிந்தனையுடயவர்கள் எனக் கருதும் பல பள்ளிகள், நிறுவனங்கள் இன்னமும் பழங்காலத்து உடைகளை கட்டிக்கொண்டு அழுவது தொடர்கிறதுதான்.

பினஃபோர், குட்டைப் பாவாடைகளை இன்னமும் பள்ளிகளில் கட்டாயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. விளையாட, மிதிவண்டியில் செல்ல மட்டுமல்ல, இயல்பாகஅமரக்கூட பெண் குழந்தைகள் சங்கடப் படுகிறார்கள். இதெல்லாம் பிரிட்டிஷ்காலத்து உடைகள். நடைமுறைக்கு மாற மாட்டேன் எனப் பள்ளிகள் அடம் பிடிப்பது முறையல்ல. பள்ளிகள் மட்டுமல்லாமல், காவல்துறை, ராணுவம், விமானப் பணிப்பெண் எனப் பல பணிகளில் இருப்பவர்கள் ஆண்கள் அணியும் உடையை அப்படியே அணிகிறார்கள். ஆண்களுக்கு நிகராக பாரபட்சம் இல்லாமல் பெண்களும் அதேவேலையைச் செய்யவேண்டும்தான். ஆனால், பெண்களுக் கான சௌகரியமான உடையை வடிவமைக்க வேண்டும். ஆண்களின் உடையை அப்படியே காப்பி அடிப்பது தவறு. இன்னொரு மிக முக்கியமான விஷயம், ஒரு பெண்ணுக்கு நடக்கும் தீமைகளுக்கு அவளது உடைகள்மீது பழிபோடுவது. இதுபோல உடையணிந்தால் அவன் அப்படித்தான் நடந்துகொள்வான் எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? பண் பானவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும்.

ஆண்களும் பெண்களின் உடையென்பது அவரவர் விருப்பம் எனவும், என்ன நடந்தாலும் இதையெல்லாம் காரணம் காட்டி தீங்கிழைக்கக்கூடாது எனவும் அவர்களைப் பாதுகாப்பது பற்றி சிந்தித்து, போகப்பொருளாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். காலம் நிச்சயமாக நன்றாக மாறி வருகிறதுதான். வரும் காலங்களில் சமுதாயம் நிச்சயமாக பொருத்தமான ஆடைகளுடன், இன்னும் சிறப்பாக ஆகுமென எதிர்பார்ப்போமாக. எப்படியாயினும், பெண்கள் தாங்கள் அணியும் உடையில் செளகரியமாக இருக்கிறார்களா என்பது மிக முக்கியம். உளவியல் ரீதியாக ஆலோசித்து ஒரு சமுதாயம் பெண்களின் உடைகள் எப்படி இருத்தல் நலம் என்று சொன்னாலும், கொஞ்சம் சிந்தித்தால் அதிலும் யதார்த்த செளகரியங்கள் இருப்பதை உணரமுடிகிறது. பொது இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பெரியவர்கள் முன்னால் உடைகள் வேறுபடும். இவை எல்லாமே ஒரு பெண் தன்னை எப்படி முன்னிறுத்துகிறாள் என்பதையும் சமுதாயத்தை நோக்கும் சிந்தனையையும் காண்பிக்கின்றன.
கட்டுரையாளர் : உளவியல் ஆலோசகர், சர்வதேசப் பள்ளி, சென்னை