ஹரித்வாரில் மகா கும்பமேளா நடந்து வரும் சூழலில், அங்கு காவல்துறைக்கு உதவ, பொதுமக்களுக்கு வழிகாட்ட, கூட்டத்தை கட்டுப்படுத்த, போக்குவரத்தை சீர் செய்ய என பல்வேறு பணிகளில் சுமார் 1,553 சிறப்பு காவல்துறை அதிகாரிகளாக (SPO கள்) ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை, தொப்பி ஜாக்கெட் வழங்கியுள்ளது காவல்துறை. இவர்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், 8 மணி முதல் 8 மணி வரை என 12 மணி நேர ஷிப்டில் 24 மணி நேரமும் காவலர்களுக்கு உதவுகின்றனர். இதில் நேரடியாக 1,053 ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் பணியாற்றுகிறார்கள், மீதமுள்ளவர்கள் அவசர தேவை, மாற்று ஏற்பாடுகளுக்காக எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். கடந்த கும்பமேளாவின்போது ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட்டனர். அவர்களுக்கு தற்போது எஸ்.பி.ஓக்களின் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கும்பமேளா துணை எஸ்.பி. பிரேந்திர பிரசாத் தப்ரால் தெரிவித்தார்.
தேவ்புரா சௌக்கில் பணியமர்த்தப்பட்டுள்ள கோட்வாரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலரான ஜிதின் வேதி, கூட்டத்தை நிர்வகிக்கும் போது பக்தர்களை பணிவுடன் கையாள்வதே தனது பங்கு என தெரிவித்தார். உதாரணமாக, ஒரு பக்தர் கூச்சலிடுவது, தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைய முற்படுவது போன்ற நேரங்களில் பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் சற்று கோபமடையலாம். ஆனால், எங்கள் சங்கப் பயிற்சியின் காரணமாக, நாங்கள் பக்தர்களிடம் பணிவுடன் பேசுகிறோம், கனிவுடன் வழிகாட்டுகிறோம். கொரோனா தடுப்புமுறைகளான முகக்கவசம் எப்போதும் அணிந்திருத்தல் போன்றவற்றையும், அரசுக்கு ஒத்துழைப்பதன் அவசியத்தையும், நோக்கத்தையும் அவர்களுக்கு விளக்குகிறோம்’ என்றார்.