ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு வழக்கு விசாரணை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்புப் பேரணி நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், பொதுச்சாலைகளில் அணிவகுப்பு, பேரணிகள் நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அவ்வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், 3 தேதிகளை குறிப்பிட்டு, அணிவகுப்புக்கு அனுமதி கோரி காவல்துறையிட விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த 3 தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அமைதியான முறையில் அணிவகுப்பு நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொதுநலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதை ஏற்ற நீதிபதிகள் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மார்ச் 3ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.