ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு கூட்டம் மார்ச் 11 முதல் 13 வரை குஜராத்தின் கர்னாவதியில் நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர், ‘சங்கத்தில் பல்வேறு வகையான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதில் அகில பாரத செயற்குழு கூட்டம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு 1,248 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தின் வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரே ஹொஸபலே நடத்துகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர, மாநிலத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இம்முறை 36 அமைப்புகளின் அமைப்புச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில் இவ்வாண்டில் நடைபெற வேண்டிய சங்கப் பணிகள் குறித்து திட்டமிடப்படும். நடைபெற்ற பணிகள் மறுஆய்வும் செய்யப்படும். மாநில அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். 2025ம் ஆண்டில் சங்கம் 100 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதற்கான மாநில அளவிலான திட்டங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு சங்கத்தின் பணிகளை 1 லட்சம் இடங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான பணிகள், திட்டமிடல் போன்றவை விவாதிக்கப்படும். மக்களால் அதிகம் அறியப்படாத பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கிராம அளவில் மக்களுக்கு சுய தொழில்கள் மூலம் தன்னிறைவு (ஆத்மநிர்பர்) உருவாக்க சங்கத்தால் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சமூக இணைவு (சமரஸ்தா), சுற்றுச்சூழல் (பரியாவரன்) மற்றும் குடும்பப் பிரபோதன் போன்ற பல துறைகளில் சமூகத்தில் உள்ள பல அமைப்புகளுடன் சங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.
இக்கூட்டத்தை முன்னிட்டு விசேஷ கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத்தின் பாரம்பரிய கலாச்சாரம், குஜராத்தின் வளர்ச்சி, குஜராத்தில் சங்கப் பணிகளின் படிப்படியான முன்னேற்றம், செயல்பாடுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுகிறது’ என தெரிவித்தார்.
அகில பாரத துணை பிரச்சார் பிரமுகர்கள் நரேந்திர குமார், அலோக் குமார் உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.