ராக்கெட்ரி: தி நம்பி விளைவு

நம்பி நாராயணன் என்ற புகழ்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற திரைப்படம். பல கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகிறது. நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் ‘பான் இந்தியா’ திரைப்படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் பற்றி நடிகர் மாதவன் கூறுகையில், ‘விக்ரம் வேதா’ படம்முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்கக் கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் சித்ரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். இந்த கதையை எடுக்க நான் நம்பி நாராயணனைச் சந்தித்தபோது என் வாழ்க்கையே மாறியது. அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைவுகூர்ந்தபோது கொந்தளித்தார். நான் அவரை சமாதானப்படுத்தினேன். ‘அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீங்கள் விடுவிக்கப்பட்டீர்கள். இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று சொன்னேன். அவரோ, “நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் எனது பெயரை கூகுள் செய்து பாருங்கள், அதில் ‘ஸ்பை’ என குறியிடப்பட்டிருக்கும். எனது குடும்பமும் அப்படி முத்திரை குத்தப்பட்டுள்ளது. அது மீள முடியாததாகவே உள்ளது’ என்றார். ஏழு மாதங்களுக்குப் பிறகு, திரைக்கதையோடு அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் தனது சாதனைகளைப் பற்றிப் பேசினார். அது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘இதெல்லாம் உண்மையா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டேன். நாட்டில் தேசபக்தி உள்ளவர்களில் இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். ஒருவர், தேசபக்தியை முழக்கமிட்டு, வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள், எழுதப்படாத, யாராலும் அறியப்படாத சாதனை செய்த ஹீரோக்களாக இருக்கிறார்கள். அவர் தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. நம்பி நாராயணன் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி தேசமும் உலகமும் அறிய வேண்டும் என்று விரும்பினேன். படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன்” என்று கூறினார்.