உலகளாவிய எரிசக்தி துறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இவற்றின் விலைகள் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. இதன் தாக்கம் தற்போது அமெரிக்காவிலும் எதிரொலிக்கிறது. இங்குள்ள வாகனங்கள் எரிவாயுவில்தான் இயங்குகின்றன. இதனால், அமெரிக்காவில் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது அங்குள்ள மக்களை கடும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சில மாகாணங்கள் தங்கள் எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. மேரிலாண்ட், கனெக்டிகட், ஜார்ஜியா, புளோரியா போன்ற மாகாணங்கள் 25 முதல் 36 சென்ட் வரை விலைகளை குறைக்க முடிவெடுத்துள்ளன. கலிபோர்னியா மாகாண நிர்வாகம் வேறு வகையில் செயல்பட முடிவெடுத்துள்ளது. வாகன உரிமையாளர்களுக்கு மாதம் 400 டாலர்கள் பணம் அளிப்பது, 3 மாதங்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்து சேவை உள்ளிட்ட வழிகளை சிந்தித்து வருகிறது. அமெரிக்கா முழுவதும் எரிவாயுவின் சராசரி விலை தற்போது 4.24 டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.