‘’என்னிடம் நீண்ட நெம்புகோலைத் தாருங்கள் நான் உலகத்தையே அசைத்து முன் நகர்த்துகிறேன்’’ என்று ஆர்க்கிமிடிஸ் கூறினார். அவர் கூறியது முற்றிலும் சரியானதே. நெம்புகோல், சக்தியை பலமடங்காகப் பெருக்குகிறது. நவீன உலகில் நிறுவனங்கள்தான் நெம்புகோலைக் கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் சக்தியை பலமடங்காகப் பெருக்குகின்றன. இந்த நிறுவனங்களில் ஆற்றல்மிக்க நெம்புகோலைக் கொண்டவை என்று பள்ளிக்கூடங்களைக் குறிப்பிடலாம்.
ஒரு பள்ளிக்கூடம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் சிறு பிராயத்திலேயே கருத்துகளை பதியவைத்து வலுப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் இதனால்தான் கிறிஸ்தவ மிஷினரிப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி னார்கள். பாரதத்தில் இயங்கி வந்த சுதேசிப் பள்ளிகளை இந்த விதேசி மிஷனரிப் பள்ளிக்கூடங்கள் அழித்தொழித்துவிட்டன.
‘’என்னிடம் 7 வயதுள்ள ஒரு குழந்தையைக் கொடுங்கள் அக்குழந்தையை மனிதனாக மாற்றிக்காட்டுகிறேன்’’ என்ற பழமொழி ஆழ்ந்த அர்த்தமுடையது. முஸ்லிம்களும் மதரசாக்களில் மாணவர்களின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். எனினும் அவர்கள் அறிவியலுக்கும் கணக்குப் பாடத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிப் பதில்லை. சுதந்திர இந்தியாவில் இடது சாரி வரலாற்றாசிரியர்கள் பள்ளிக்கூட பாடத்திட்டம் வாயிலாக எப்படி மூளைச்சலைவை செய்து மாணவர்களை திசைதிருப்பினார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஹிந்துக்களால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்கள் சட்டரீதியான தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றன கடந்த 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்வது அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசு பள்ளிக்கூடங்களைக் காட்டிலும் இந்த தனியார் ஹிந்துப் பள்ளிக்கூடங்கள் முதன்மை பெறத் தொடங்கின. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு உறுத்தலை அளித்தது. இப்பின்னணியில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 – என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் 29ம் 30ம் சரத்துகள் சிறுபான்மையினர் நிறுவனங்களில் அரசு தலையிடுவதை தடுத்துள்ளது. எனவே கல்வி உரிமைச் சட்டம் என்பது பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கே பொருந்தும் என்பதே இதன் சாராம்சம்.
இச்சட்டத்தால் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு துளியும் பாதிப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு அடுக்கடுக்கான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே இதை உறுதிப்படுத்துகிறது. ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் தேக்க நிலையில் உள்ளன. ஆனால் 2015 – 2016 முதல் 2018 – 19 வரையிலான காலக்கட்டத்தில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள் 126 சதவீதம் அதிகரித்துள்ளன. மூன்றாண்டு களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக் கூடங்கள் இரட்டிப்புக்கும் அதிகமான உயர்ந்துவிட்டன. ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன. பாரபட்சத்துக்கும் மிகுந்த வித்தியாசத்துக்கும் மூலகாரணம் கல்வி உரிமைச் சட்டம்தான்.
பாதித்து முதலாவதாக அனுமதி அளிப்பதிலேயே பிரச்சனை தொடங்கி வருகிறது. ஹிந்துக்கள் பள்ளிக்கூடங்கள் தொடங்க கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கேரள அரசு, ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக் கூடத்துக்கு அனுமதி வழங்கவேண்டுமானால் அப்பகுதியில் அப்பள்ளிக்கூடத்துக்கு தேவை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும். ஹிந்துக்கள் பள்ளிக்கூடம் தொடங்க இத்தகைய ஆய்வு எதற்கு? ஹிந்துக்களின் கல்வி உரிமையை கேரள அரசு பறித்துவிட்டது. கேரளாவில் உள்ள பல விதிமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை. முட்டாள்தனமானவை. உதாரணமாக சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.சி, தனியார் பள்ளிக்கூடம் தொடங்க கட்டாயம் மூன்று ஏக்கம் நிலம் தேவை என்பது கேரள அரசின் விதிமுறை. கேரளாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இந்த நிபந்தனையை நிறைவு செய்வது சாத்தியமல்ல. இந்த விதிமுறை சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாது. அதிஷ்டவசமாக கேரள உயர் நீதிமன்றமும், பாரத உச்ச நீதிமன்றமும் இந்த விதிமுறையை ஒழித்துவிட்டன. மற்ற பல விதிமுறைகள் இப்போதும் அமலில் உள்ளன.
இரண்டாவதாக கல்வி உரிமைச்சட்டம், ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் அரசின் தலையீட்டை அதிகரித்துள்ளது. பல்வேறு சோதனைகளை நடத்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு எவ்வளவு என்பதுடன் பள்ளிக்கூடங்கள் சீராக செயல்படுகின்றனவா போன்றவற்றையும் நிதி விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறியவும் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது கூட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கடுமையான நிபந்தனைகளால் ஹிந்துக்கள் பள்ளிக் கூடங்களை நடத்துவது மிகவும் கடினமான காரியமாக உள்ளது.
மேலும் ஜாதி, மதம், வருவாய் அடிப் படையிலான ஒதுக்கீடு என்ற பெயரில் 25 சதவீத இடங்களை அரசு கட்டாயமாக அபகரித்துக்கொண்டுள்ளது. இதற்கான செலவுத்தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் இதில் காலதாமதம் சர்வசாதாரண நிகழ்வாக உள்ளது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு அரசிடம் இருந்து வரவேண்டிய தொகையை நிலுவையில் உள்ளது என்பதை பள்ளிக்கூடங்களை நடத்தும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது தேசிய ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த சோனியாதான் மூல காரணம். சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்த கட்சி காங்கிரஸ். எனவேதான், ஹிந்துக்களுக்கு தீங்கு இழைப்பதற்காகவே கல்வி உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்தது. ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீது சுண்ணாம்பையும் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் மீது வெண்ணையையும் தடவும் இந்த போக்கு விபரீதமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு சரிசமமாக ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும்.அரசியல் சாசனத்தின் 29வது, 30வது பிரிவுகள் எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தும் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மதத்துக்கோ சிறுபான்மையினர் நிர்வாகத்துக்கோ துளியும் இடம் அளிக்கத்தேவையில்லை. ஹிந்துக்களுக்கு தீங்கிழைக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை உடனே திருத்தவேண்டும்.
நன்றி : பிரனவ் போண்டே ஊடகவியலாளர், ஆர்கனைசர்; தமிழில் : அடவி வணங்கி