மீன்கழிவுகள் மூலம் வருவாய்

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவக் குடும்பங்களின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தொழில் உள்ளது.  இவர்களின் மாத வருமானம் அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. அதேவேளையில் மீன்பிடித்தல் மற்றும் விற்பனை மூலம் வரும் மீன்கழிவுகள் அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் மற்றும் உப்பங்கழிகளில் குவிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் மாசடைகிறது. இப்பிரச்சினையைப் போக்க ஐ.சி.ஏ.ஆர் – மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (சிபா) மீன் கழிவுகளைச் சுத்திகரித்து, பிளாங்டன் ப்ளஸ் என்ற நுண்ணுயிரி, ஹார்ட்டி ப்ளஸ் என்ற தோட்டக்கலை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நம்பிக்கை மீனவர்குழு, மீன்கழிவுகளைச் சுத்திகரிக்கும் ஆலையை கடந்த 2019ல்  ஐசிஏஆர்- சிபா தொழில்நுட்ப உதவியுடன் அமைத்தது. இதன் மூலம் உள்ளூர் மீன் சந்தைகளின் கழிவுகள் பிளாங்டன் ப்ளஸ், மற்றும் ஹார்ட்டி ப்ளஸ்ஸாக மாற்றப்படுகின்றன. சிபா வழிகாட்டுதலுடன் நம்பிக்கை மீனவர்குழு தங்கள் தயாரிப்புகளை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்க மீனவ விவசாயிகளிடம் விற்பனை செய்தனர்.

இதன்மூலம் இந்தக் குழு ஆண்டுக்கு 15 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் சென்னையில் நாற்பதுக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியது. இதனால், அவர்களின் சமூகப் பொருளாதார நிலையும் உயர்ந்துள்ளது. 355க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மீன்கழிவுகளைச் சுத்திகரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பின் மூலம் நம்பிக்கை மீனவர் குழுவைச் சேர்ந்த வேளாங்கன்னி என்ற பெண், வி எஸ் ஃபிஷ் வேஸ்ட் ஹைட்ரோலிசேட்  என்ற நிறுவனத்தைத் தொடங்கி புதிய தொழில் முனைவோராக உருவெடுத்து உள்ளார். இந்நிறுவனத்தை  ஐசிஏஆர் – சிபா இயக்குநர் டாக்டர் கே.பி ஜிதேந்திரன் தொடங்கி வைத்தார்.