நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 10.64 ஹெக்டேர் நிலம் விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய கட்டுமானங்களை உருவாக்க பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், கோயில் நிலத்தை முறைகேடாக கிராம நத்தமாக மாற்றிய வருவாய்த்துறை, அந்த நிலத்தை 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது. இதனை எதிர்த்து கோயில் சார்பில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்துள்ள வழக்கில், கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை தடையில்லா சான்று இல்லாமல் பட்டா வழங்கக் கூடாது என, விதிகள் உள்ளன. கோயில் விழா, சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தலாம் என்ற விதிகளை மீறி பட்டா வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், அந்த இடம் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது என நிரூபிக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. அரசு நிலம்தான் பட்டா போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயிலின் நிலத்தை அதன் வருமானத்துக்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்துக்காக பயன்படுத்தவோ, வேறு யாருக்கு வழங்கவோ முடியாது என, அறநிலையத் துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.