பாரதத்தில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றத்தில் யூ.பி.ஐ உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. யூ.பி.ஐ தளத்தின் வாயிலாக பாரதத்தில் 2021 ஜூலை மாதம் 6.06 லட்சம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் நெட்பேங்கிங் சேவையும் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வகையில், உடனடி இணைய பணப்பரிமாற்றத்திற்காக மக்கள் அதிகம் பயன்படுத்துவது இம்ப்ஸ் (Immediate Payment Service) வகையிலான பணப்பரிமாற்ற முறைதான். ஆனால், இதில் தற்போது ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் என்ற நிலை உள்ளது. இது விரைவில் 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார். மேலும், ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் என எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடரும். 2022ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாகவும், நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.