படத்தை தடை செய்ய கோரிக்கை

ராமாயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள ராமாயண கதாபாத்திரங்கள், உடைகள், காட்சிகளுக்கு கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. படத்தை புறக்கணிக்க ‘பாய்காட் ஆதிபுருஷ்’ என்ற ஹேஷ்டேக்கும் சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த படத்திற்கு எதிராக படத்தையே தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை பூஜாரியான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். ஆகவே அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கண்டித்துள்ளார். முன்னதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் ‘பெரும்பான்மை சமூகத்தின் மதத்தை மட்டும் ஏன் திரைப்படங்களில் குறிவைக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது எழுந்துள்ள இந்த கண்டனங்களால் மிரண்டுபோயுள்ளனர் படக்குழுவினர், படத்தில் வரும் சில தவறான காட்சிகளையும் வி.எப்.எக்ஸ் காட்சிகளையும் அவசர அவசரமாக திருத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.