தி.மு.க செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி என்பவர், ”பெரியார் சொன்னதைப் போலத் தமிழகத்தில் பிராமணர்கள் இனப் படுகொலை செய்ய வேண்டும்” எனச் சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். இதையடுத்து பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டில் உள்ள பிராமண சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பாதிக்கிறது. அவர்கள் வாக்களிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் தேர்தலில் தி.மு.க எளிதில் வெற்றி பெறும் சூழல் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தி.மு.கவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். உதய சூரியன் சின்னத்தை முடக்க வேண்டும் எனத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக, தி.மு.க., மீது வழக்கு தொடுக்கவும், தமிழக ஆளுநரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கவும் கோரவுள்ளார் சுப்பிரமணிய சாமி. முந்தைய காலங்களில் சுப்பிரமணியன் சுவாமியால் தொடரப்பட்ட பல வழக்குகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையைக் கிளப்பியது நினைவு கூரத்தக்கது.