நிதின் கட்கரி வேண்டுகோள்

கார்களில் பயணிப்போர் பாதுகாப்பைப் பொருத்தவரை ஏர்பேக்ஸ் எனப்படும் காற்றுப்பைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. 2014க்கு முன்பு விற்பனையான சில கார்களில் ஆரம்பவிலை மாடல்களில் சுத்தமாகக் காற்றுப் பைகளே கிடையாது. விலை அதிகமான மாடல்களில் ஓட்டுனருக்கு மட்டுமே கற்றுப் பைகள் வைக்கப்பட்டன். அதன் பிறகு கார்களில் டிரைவருக்கு மட்டுமாவது காற்றுப்பை இருக்க வேண்டும் என்கிற சட்டம் வந்தது. எனினும் விபத்துப் பலிகள் அதிகமாகவே, ஏப்ரல் 2021ல் இருந்து விற்பனையாகும் அனைத்து கார்களுக்கும் டிரைவருக்குப் பக்கத்துப் பயணிக்கும் காற்றுப் பை வேண்டும் என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) சந்திப்பில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இனிமேல் 6 காற்றுப்பைகள் கொண்ட கார்களைத் தயாரித்தால், விபத்துகளைக் கணிசமாகக் குறைக்கலாம் என வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும்,எலெக்ட்ரிக் கார்கள் தவிர்த்து, 100 சதவீதம் எத்தனால் போன்ற எரிபொருட்களில் இயங்கும் ( FFVs) கார்களையும் பாரதத்தில் தயாரிக்கவும் கேட்டுக்கொண்டார்.