குடியரசு அணிவகுப்பு அரசியல்

இவ்வருட குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பா.ஜ.க ஆளும் மாநில ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி வழக்கம்போல இதனையும் அரசியலாக்கப் பார்க்கின்றன சில மாநிலக் கட்சிகள்.

ஆனால், குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முதலில்அந்தந்த மாநிலங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் கலந்துகொள்ளும் மாநிலங்களின் ஊர்திகள் எவை என்பது பல நாட்களுக்கு முன்பே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு ஆய்வு செய்யும். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒரே மாதிரியான கருத்தோட்டத்துடன் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் புதிய கருத்துக்களுடன் இருக்க வேண்டும் என்பது அடிப்படை கோட்பாடு. பெறப்பட்ட விண்ணப்பங்களை இக்குழு ஆய்வு செய்து அத்துடன் கூடிய அந்த மாநிலத்தின் ஊர்தியின் மாதிரிகள், வரைபடங்கள் முதலியவற்றை பரிசீலிக்கும். திருப்தி ஏற்பட்டால், அந்த ஊர்தியின் 3 டி டிசைன்கள் கோரப்படும்.

பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் குடியரசு தின அணிவகுப்பில் தங்களின் ஊர்திகளை காட்சிப்படுத்த விண்ணப்பித்து இருந்தாலும், இந்த நிபுணர் குழுவே எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்கும் என்பதை முடிவு செய்யும். கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் ஆறு முறை மட்டுமே இடம் பெற்றது. 2015, 2018ம் ஆண்டுகளில் தமிழகத்தின் ஊர்திகள் இதில் பங்கேற்கவில்லை. அதே போல, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் ஊர்திகள் அனைத்தும் அனைத்து குடியரசு தின விழா அணிவகுப்பிலும் இடம் பெற்றதில்லை. இன்னும் சொல்லப்போனால், குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மத்திய அரசுத் துறைகளின் ஊர்திகளும் இடம் பெறும். அவையும்கூட தகுதி பெறாத பட்சத்தில் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.