பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”அதானிக்கு தவறான சலுகைகளை மத்திய அரசு அளிப்பதாக ராகுல் காந்தி நினைத்தார் என்றால் அது தவறு. பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்த ஒரு தவறான சலுகையையும் அதானிக்கு அளிக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கூறி வருகிறார். இதன்மூலம் அவர் மீண்டும் மீண்டும் தவறிழைத்து வருகிறார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ராகுல், இதேபோல தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். தற்போது மீண்டும் அதையே செய்கிறார். பிரதமர் மோடிக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுக்களை கூறும் விவகாரத்தில் அவர் இதுவரை எந்தப் பாடத்தையும் கற்றதாகத் தெரியவில்லை. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் அதானிக்கு விழிஞ்சம் துறைமுகம் கொடுக்கப்பட்டது. அதுவும் எந்த ஒரு டெண்டரும் விடாமல் துறைமுகம் கொடுக்கப்பட்டது. கேரள அரசு அவ்வாறு கொடுத்ததை ராகுல் காந்தி ஏன் தடுக்கவில்லை? அதேபோல, ராஜஸ்தானின் முழு சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் அதானிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதனையும் ராகுல் காந்தி ஏன் தடுக்கவில்லை? தொழிலதிபர்களுக்கு சாதகமாக தவறான சலுகைகள் ஏதாவது கொடுக்கப்பட்டிருந்தால்; அவற்றைச் செய்தது காங்கிரஸ் அரசுகள்தான். ஆனால், ராகுல் காந்தி அவை குறித்து ஒருபோதும் பேச மாட்டார்” என்று தெரிவித்தார்.