நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏப்ரல் 11 முதல் அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது மாதம் ஒன்றுக்கு 38.8 லட்சம் மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இந்த உற்பத்தித்திறன் விரைவில் மாதம் சுமார் 80 லட்சம் என்ற அளவிற்கு இரட்டிப்பாக உயரவிருக்கிறது. நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஏற்ப இதன் விலைரூ. 900 முதல் ரூ. 5000 வரை விற்கப்படுகிறது. இந்த விலையை குறைக்க மத்திய அரசு மருந்து அறிவுறுத்தியுள்ளது. பல நிறுவனங்களும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டன. மருந்து தட்டுப்பாட்டை போக்கவும், கள்ள சந்தை விற்பனையை தடுக்கவும், இந்த மருந்து எந்தெந்த முகவர்களிடம் கிடைக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வலைத்தளத்தில் பதிவிட வேண்டும். இந்த மருந்தை தனி நபர்கள் வீட்டில் லேசான காய்ச்சல் உள்ளவர்களுக்கு வழங்க கூடாது, மருத்துவமனையில் சுவாச கோளாறுடன் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.