ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியுடன் சேர்த்து மூன்று இடங்களை ஆந்திர தலைநகராக உருவாக்க அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முயற்சி மேற்கொண்டார். இந்த முடிவு ‘துக்ளக்’தனமானது என பொதுமக்களும் எதிர்கட்சிகளும் விமர்சித்தன. பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், ‘மூன்று தலைநகரங்களுக்கு புதிய சட்டத்தை இயற்ற அரசுக்கு உரிமை இல்லை. தலைநகர் மாஸ்டர் பிளானை உடனடியாக அமல்படுத்தி அமராவதி தலைநகரை மேம்படுத்த வேண்டும். முந்தைய ஒப்பந்தங்களின்படி, 6 மாதங்களுக்குள் வளர்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும். நிலங்களைக் கொடுத்த விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்குள் அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மனைகளை ஒப்படைக்க வேண்டும். வளர்ச்சி பணிகள் குறித்து நீதிமன்றத்தில் அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். மூலதன நோக்கத்தைத் தவிர வேறு நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மாநில அரசு அடமானம் வைக்க முடியாது’ என உத்தரவிட்டது. இந்த உத்தரவு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசுக்கும் அதன் முதல்வருக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.