ரெட் டெரர் தேசத்திற்கு அச்சுறுத்தல்

பாரத தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குவது கம்யூனிசத்தின் மற்றொரு அவதாரமான மாவோயிஸம் எனும் சிகப்பு பயங்கரவாதம். 2009ல், அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் அரசு இந்த ஆபத்தை அடையாளம் கண்டு மிகப்பெரிய துணை ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள், காவல்துறையினர் உதவியோடு நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம்,பிஹார், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, ஒடிஸா மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசம் ஆகிய சுமார் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 9 மாநிலங்களில் 100க்கும் அதிகமான மாவட்டங்கள் முன்பு நக்சல்களால் மோசமாக பாதிக்கப்பட்டன. பல வருட நடவடிக்கைகளால் இன்று ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன, தற்போது தேசத்தில் 46 மாவட்டங்களில் மட்டுமே இவர்களின் ஆதிக்கம் உள்ளது. எனினும், இதனை முற்றிலுமாக ஒடுக்க, அரசு செய்யப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

இந்த எண்ணிக்கையில் குறைவான கம்யூனிச பயங்கரவாதிகள் தேசத்தின் பல முக்கியத்துறைகளில் ஊடுருவியுள்ளனர். கம்யூனிசவாதிகளுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள் போல அனைவரும் ஆயுதம் ஏந்துவார்கள் என்பது இல்லை, சிலர் பேனாவும் ஏந்துவார்கள். ஒரு சிலர் அரசியலில் இருப்பார்கள். மக்கள் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் ஊடகவாதிகளுக்கும் இதில் முக்கியப்பங்கு உண்டு. இவர்களை அர்பன் நக்ஸல்கள் என பொதுவாக குறிப்பிடுவது உண்டு.

இதுபோல, மாணவர் அமைப்புகள், பெண்களுக்கான அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், தமிழ் தேசிய அமைப்புகள் என பல்வேறு பெயர்களில் இவர்கள் செயல்படுகின்றனர். இவர்களும் ஆயுதம் ஏந்துபவர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. தேசப்பற்று என்பது இவர்களுக்கு துளியும் கிடையாது என்பது இவர்களே ஒப்புக்கொண்ட ஒன்று. இவர்களின் பாசமெல்லாம் இன்றைய சீனாவின் மீதும் முந்தைய ஒருங்கிணைந்த ரஷ்யாவின் மீதும்தான். அப்பாவியான இளைஞர்களை ஆசை, போதை என பல வழிமுறைகளை பயன்படுத்தியும் பேசியும் தங்கள் வழிக்கு கொண்டுவரும் இவர்கள், அந்த இளைஞர்களை தவறாக பயன்படுத்தி பல்வேறு தேச துரோக செயல்களை அரங்கேற்றுகின்றனர். இதில் விட்டில் பூச்சிகளாய் விழுந்து தங்கள் வாழ்க்கை, உயிர், மானம் இழந்தவர்கள் பல லட்சம். இதனை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வேண்டும், தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.