பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடும்படி அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூட ஆணையிட்டது மிகச்சிறந்த நடவடிக்கை. புதுச்சேரி அரசுக்கு மது வணிகம் மூலமாகத் தான் பெருமளவில் வருவாய் கிடைக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் புதுவை அரசு மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை. அதேபோன்ற நடவடிக்கை தமிழகத்திலும் எடுக்கப்பட வேண்டும்; மதுக்கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும். அதன்மூலம் நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமின்றி, ஏழைகள் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடிகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.