வ.உ.சி. போல வழக்குரைஞர் தொழிலிலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர் டி.என்.ஆர். அவரது அன்பர்களில் ஒருவரான துணைப் பதிவாளர் இரா. சுப்பராயலு, டி.என். ஆரின் எண்பதாம் ஆண்டு விழாவின்போது அமுதசுரபியில் (செப்டம்பர் 2014) அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரையை எழுதினார். கவிஞர் ரவிசுப்பிரமணியன் டி.என்.ஆர். குறித்து எடுத்துள்ள மிகச் சிறந்த ஆவணப்படம் அவரது பெருமையை நிரந்தரமாகப் பேசும்.
…………………………………….
*டி.என்.ஆர். காலமானார் என்ற செய்தி அறிந்தபோது மனம் துயரத்தில் ஆழ்ந்து அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியது.
தருமை ஆதீன விழா, சேக்கிழார் விழா போன்றவற்றில் கலந்துகொண்டு பேச தஞ்சையிலிருந்து அவர் சென்னை வந்தபோதெல்லாம் அவர் பேசும் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றிருக்கிறேன். அவரின் அழுத்தமும் ஆழமும் நிறைந்த பேச்சைக் கேட்டு வியந்திருக்கிறேன்.
கூட்டம் நிறைவடைந்தபின் அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன். அவர் இல்லத்து மங்கல நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.
டி.என்.ஆரின் புதல்வர் சுரேஷ் அவர்களின் மணிவிழா சென்னையில் நடைபெற்றபோது தான் டி.என்.ஆரை நான் கடைசியாகச் சந்தித்தேன்.
அவர் மனைவி, அவரின் நான்கு புதல்வர்கள், மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருமே அவர் மாபெரும் தமிழறிஞர் என்பது குறித்துப் பெருமிதம் கொண்டவர்கள். அவர்மேல் மிகுந்த பாசம் மட்டுமல்ல, மிகுந்த மதிப்பும் கொண்டவர்கள்.
அப்படிப்பட்ட குடும்பம் அவருக்குக் கிடைத்ததும் இறையருள்தான். அவர் வாழ்நாள் முழுவதும் எந்தெந்த லட்சியங்களை முன்னெடுத்துச் சென்றாரோ, அதே லட்சியங்களை இனி அவர் குடும்பத்தினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.
அவரது நூல்கள் மிகக் கூர்மையானவை. சிந்தனைக் கிளர்ச்சி ஏற்படுத்துபவை. சேக்கிழாரும் பாரதியாரும் அவரை வாழ்நாள் முழுவதும் ஈர்த்துக்கொண்டே இருந்தார்கள். கம்பராலும் அவர் கவரப்பட்டிருந்தார்.
மில்டனின் காவியங்கள் பற்றியும் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கிறார். தமிழுக்கு இணையாக ஆங்கிலத்திலும் வல்லவர்.
அவர் பேசிய, எழுதிய பாடுபொருள் இன்னும் எத்தனை எத்தனையோ. பாரதியியல் அறிஞர் வரிசையில் மிக முக்கியமானவர்.
மொழிபெயர்ப்புத் துறையிலும் மாபெரும் நிபுணர். பக்தி இலக்கியத்தை ஆராதித்த அவர், தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்ற உன்னத நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.
பழைய இலக்கியங்களில் ஆழங்கால் பட்டிருந்த அவர், நவீன இலக்கியங்களிலும் தீராத நாட்டம் கொண்டிருந்தார். சேக்கிழாரைப் பற்றிப் பேசும் அவரிடம் பிச்சமூர்த்தி பற்றியும் மெளனி பற்றியும் கு.ப.ரா. பற்றியும் ஆழமாக உரையாட முடியும்.
ஒரு மனித வாழ்நாளில் எப்படி இவ்வளவு நூல்களைப் படித்து அவர் மனத்தில் தேக்கிக் கொண்டிருந்தார் என்பது நினைக்க நினைக்க ஆச்சரியம் தருகிறது. படிப்பே வாழ்வாக வாழ்ந்த பெருமகன்.
தருமை ஆதீனம் வழங்கிய சைவ சித்தாந்த கலாநிதி, யாழ் பல்கலைக் கழகம் வழங்கிய முதுமுனைவர் பட்டம், தமிழக அரசின் மகாகவி பாரதி விருது, வானவில் பண்பாட்டு மையம் வழங்கிய பாரதி விருது எனப் பல சிறப்புகள் பெற்றவர்.
அவர் இல்ல நூலகத்தில் சுமார் ஐம்பதாயிரம் நூல்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த நூல்களின் எண்ணிக்கை அதையும் தாண்டும்.
வ.உ.சி. போல வழக்குரைஞர் தொழிலிலிருந்து இலக்கியத்திற்கு வந்தவர். அவரது அன்பர்களில் ஒருவரான துணைப் பதிவாளர் இரா. சுப்பராயலு, டி.என்.ஆரின் எண்பதாம் ஆண்டு விழாவின்போது அமுதசுரபியில் (செப்டம்பர் 2014) அவரைப் பற்றி ஓர் அருமையான கட்டுரையை எழுதினார்.
கவிஞர் ரவிசுப்பிரமணியன் டி.என்.ஆர். குறித்து எடுத்துள்ள மிகச் சிறந்த ஆவணப்படம் அவரது பெருமையை நிரந்தரமாகப் பேசும்.
டி.என்.ஆர். சம்ஸ்க்ருத வெறுப்பில்லாதவர். `சம்ஸ்க்ருதம் தேவபாஷை, தமிழோ மகாதேவ பாஷை` என முழங்கியவர்.
ஜாதி சமய இனத் துவேஷம் ஒருசிறிதும் இல்லாதவர். பாரதியாரைப் போற்றியதோடு பாரதிதாசனையும் போற்றியவர். ரோஜா முத்தையா நூலகத்தின் வளர்ச்சியில் அவருக்கும் பங்குண்டு.
அவரது மேடைப் பேச்சு சராசரி மேடைப் பேச்சல்ல. கேட்பவர்களைக் கவர எந்த நகைச்சுவை உத்தியையும் அவர் கையாண்டதில்லை. அவரது பலம் என்பது அவர் சொல்லும் ஆய்வுக் கருத்துகளே.
உயர்ந்த தளத்தில் சிறந்த ஆய்வுக் கருத்துகளை விவரித்தவாறே அவரால் கேட்பவர்களைக் கட்டிப்போட முடிந்தது என்பது ஆச்சரியம்தான். அறிவார்ந்த இலக்கியப் பேச்சாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது கவலையளிக்கிறது.
இலக்கியப் பேச்சாளர்கள் எப்படிப் பேசவேண்டும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுததுக் கூற நம் முன் இருந்த ஓர் உதாரணம் இதோ மறைந்துவிட்டது.