பொ.யு.மு. 100 :
ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில், மிகப்பெரிய ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டது.
பொ.யு.பி. 1528 :
மொகலாய ஆக்கிரப்பாளன் பாபரின் படைத்தளபதி மீர்பாஹி அயோத்தியில் பாபர் பெயரில் மசூதியைக் கட்டினான்; முன்னதாக அங்கிருந்த ராமர் கோயிலை இடித்து தரைமட்டமாக்கி, அதன்மீதே மசூதியை எழுப்பினான்.
1600- – 1853:
கோயிலை மீட்க பலமுறை போர்கள், போராட்டங்கள், பல்லாயிரக்கணக்கானோர் ராமர் கோயிலை மீட்கும் போர்களில் பலியாகினர்.
1611:
பிரிட்டீஷ் வியாபாரி வில்லியம் ஃபின்ச் எழுதிய பயணக்குறிப்பில், ஆக்கிரமிப்பில் இருந்தபோதும், அயோத்தியில் இருந்த மசூதியில் ஹிந்துக்கள் ராமனை வழிபட்டனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
1717:
ராஜபுதன அரசர் இரண்டாம் ஜெய்சிங், முகலாய அரசுடன் பேசி, ராமர் கோயில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார். அதையடுத்து, அங்கு வழிபாடு சில காலம் தடையின்றி நடந்தது.
1853:
அவத் ராஜ்ஜியத்தின் மன்னரான நவாப் வஜித் ஷா இருந்தபோது, நிர்மோஹி அகாரா மடத்தின் துறவிகள் சர்ச்சைக்குரிய கட்டிடம் கைப்பற்ற முயற்சி; கலவரம்; பிரிட்டிஷ் அரசு வளாகத்தின் உள்ளே முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறத்தில் ராம்சாத்புராவில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.
1883:
கோயிலை மீட்க முயற்சி; பிரிட்டிஷ் அரசு தடுத்தது; சுற்றிலும் வேலி அமைத்த மாவட்ட நிர்வாகம் வளாகத்தைப் பூட்டியது.
1885 ஜனவரி 27:
அந்த இடத்திலேயே ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி, மஹந்த் ரகுபீர்தாஸ் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு; நீதிபதிகள் நிராகரிப்பு.
1937:
அயோத்தி ராமர் கோயிலை மீட்க, கோரக்பூர் மடத்தின் தலைவர் மஹந்த் திக்விஜய்நாத் (மஹந்த் அவைத்யநாத்தின் குரு) தலைமையில் முயற்சிகள் துவங்கின.
1946:
ராமர் கோயிலில் வழிபாட்டு உரிமை கோரி, ஹிந்து மகா சபையின் அங்கமான அகில பாரதீய ராமாயண மகாசபா போராட்டத்தைத் துவக்கியது.
1949:
அயோத்தியில் ஸ்ரீ ராமசரிதமானஸ் பாராயணம் செய்யும் தொடர் போராட்டத்தை அகில பாரதீய ராமாயண மகாசபா நடத்தியது.
1949 டிசம்பர் 22, 23:
பாபர் மசூதி வளாகத்தினுள் திடீரென, ராமர், சீதை விக்கிரகங்கள் நிறுவப்பட்டன. சிலைகளை அகற்றினால் கலவரம் வெடிக்கும் என்று கூறி, மத்திய அரசின் உத்தரவை ஏற்க பைசாபாத் மாவட்ட ஆட்சியர் கே . கே. நாயர் மறுப்பு; வளாகம் பூட்டப்பட்டது.
1950 ஜனவரி 16:
அயோத்தி பிரமுகர்கள் கோபால் சிங் விஷாரத்,மஹந்த் ராமசந்திரதாஸ் ஆகியோர், ராமரை வழிபட உரிமைகோரி,பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு.
1959:
ராமர் சிலை உள்ள அந்த இடம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று நில உரிமை கோரி நிர்மோஹி அகாராவழக்கு.
1961:
பாபர் மசூதிக்குள் உள்ள ராமர், சீதை சிலைகளை அகற்றக் கோரி சன்னி வக்பு வாரியம் வழக்கு.
1978:
தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் அருகே அகழாய்வு நடைபெற்றது. அந்த ஆய்வில், அந்த இடத்தில் பழமையான கோயில் கட்டுமானம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
1984:
ராமர் கோயிலை மீட்க, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கல் ராமஜன்ம பூமி மீட்பு இயக்கத்தைத் துவக்கினார்.
1984, அக்டோபர் 7:
பிகாரின் சீதாமார்ஹியில் இருந்து அயோத்தி நோக்கி ராமஜன்ம பூமி மீட்பு யாத்திரையை விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கியது. பிரதமர் இந்திராகாந்தி (அக்டோபர் 31) படுகொலையால், இந்தப் போராட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
1985 அக்டோபர் 31:
உடுப்பியில் கூடிய துறவியர் மாநாடு, அயோத்தியில் ராமரைத் தரிசிக்க மசூதி வளாகத்தைத் திறக்க வேண்டும் என்று கோரியது; கோரக்பூர் மடத்தின் தலைவர் மஹந்த் அவைத்யநாத் (உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தின் குரு) தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.
1986:
சையத் சஹாபுதீன் தலைமையில் பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
1986 ஜனவரி 25:
ராமர் கோயிலில் வழிபட கதவுகளைத் திறந்து விடுமாறு பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உமேஷ் சந்திர பாண்டே வழக்கு.
1986 பிப்ரவரி 1:
அயோத்தியில் ராமரை வழிபட சர்ச்சைக்குரிய இடத்தில் அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.
1989:
அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம் என்று பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
1989:
வி.எச்.பி சார்பில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட, ராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பும் வகையில், நாடு முழுவதும் ராம்சிலா யாத்திரைகள் நடத்தப்பட்டன.
1989 நவம்பர் 9:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய வளாகத்துக்கு வெளியே ‘ராம்சிலான்யாஸ்’ எனப்படும் பூமிபூஜை நடைபெற்றது. பிகாரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் காமேஸ்வர் சௌபால் ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
1990 செப்டம்பர்:
வி.எச்.பி சார்பில் நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரைகள் நடத்தப்பட்டன; கரசேவகர்கள் அயோத்தி நோக்கிச் செல்லுதல்.
1990 செப்டம்பர் 25:
ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தின் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கி ராமரத யாத்திரையை பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி துவக்கினார்.
1990 அக்டோபர். 23 :
பிகாரின் சமஸ்திபூரில் அத்வானி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கரசேவகர்கள் கைது செய்யப்பட்டனர்.
1990 அக்டோபர் 30
அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது முலாயம் சிங் அரசு துப்பாக்கிச் சூடு; கரசேவகர்கள் பலநூறு பேர் பலி. சரயூ நதியெங்கும் ராம பக்தர்களின் சடலங்கள் மிதந்தன.
1991 ஜூன் 24
உத்தரப்பிரதேசத்தில் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
1992 நவம்பர்
பரிஷத் சார்பில் ராமர் பாதுகை யாத்திரைகள் நாடு முழுவதும் நடந்தன; கரசேவகர்கள் மீண்டும் அயோத்தி நோக்கிச் செல்லுதல்.
1992 டிசம்பர். 6
அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் ராம பக்தர்களால் தரைமட்டமாக்கப்பட்டது; அதே இடத்தில் ராமருக்கு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டது; நாட்டின் பல இடங்களில் மதக் கலவரம்; சுமார் 1,500 பேர் பலி. அயோத்தி நிகழ்வைக் காரணம் காட்டி, உ.பி. ம.பி, ராஜஸ்தான், இமாச்சல் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் கலைப்பு.
1992 டிசம்பர் 10
ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள், அப்போதைய நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசால் தடை செய்யப்பட்டன.
1992 டிசம்பர் 16
சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.லிபரான் ஆணையம் அமைப்பு.
1993 ஜனவரி:
சர்ச்சைக்குரிய வளாகத்தின் 2.77 ஏக்கர் நிலமும், அதன் அருகில் உ.பி. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 67.7 ஏக்கர் நிலமும் மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டன.
1993 ஜனவரி 25
ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக, ராமஜன்மபூமி நியாஸ் அமைப்பு மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸர் தலைமையில் உருவாக்கப்பட்டது; அயோத்தியில் கரசேவகபுரம் என்ற இடத்தில் கோயில் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் துவக்கம்.
1993 ஜூன் 4
ஹிந்து அமைப்புகள் மீதான தடை, நீதிபதி பாஹ்ரி தீர்ப்பாயத்தால் நீக்கப்பட்டது.
1993 அக்டோபர் 5
மத்திய புலனாய்வு அமைப்பால் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்பு வழக்கு விசாரணை துவக்கம். இதில் பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கல், வினய்கத்தியார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு.
1998 மார்ச் 19
வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அமைந்தது. ராமர் கோயிலுக்கான முயற்சிகள் மீண்டும் துவக்கம்.
2002 – 2003
காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரு தரப்பிலும் சமரசப் பேச்சு நடத்தினார்.
2002 பிப்ரவரி
அயோத்தியில் ராமசேவகர்களின் பூர்ணாஹுதி மகாயக்ஞம். இதில் கலந்துகொண்டு குஜராத் திரும்பிய ராமசேவகர்கள் சென்ற ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் எரிக்கப்பட்டதில் 59 ராமபக்தர்கள் பலி.
2002 மார்ச் 15
அயோத்தியில் சிலா தானம் (கல் தூண்களை ஒப்படைத்தல்) நிகழ்வு, மஹந்த் ராமசந்திர பரமஹம்சர் முன்னிலையில் நடைபெற்றது.
2002 ஏப்ரல்
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ சிறப்பு அமர்வில், அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு விசாரணை துவக்கம்.
2003 ஜனவரி
அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததா என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வைத் துவக்கியது. இந்த ஆய்வில் மசூதி இருந்த இடத்தின் கீழே பல அடி ஆழத்தில் கோயில் கட்டுமானங்கள் இருப்பதை தொல்லியல் குழு கண்டறிந்தது.
2003 ஜூலை 31
மஹந்த் ராமசந்திர பரமஹம்ஸர் காலமானார். மஹந்த் நிருத்ய கோபால்தாஸ், ராம ஜன்மபூமி நியாஸின் தலைவரானார்.
2003 ஆகஸ்ட்
தொல்லியல் ஆய்வு நிறுவனம் அளித்த அறிக்கை, அங்கு அடித்தளத்தில் மிகப் பெரியகோயில் இருப்பதை உறுதிப்படுத்தியது. தொல்லியல் அறிஞர் கே.கே.முகமது தலைமையிலான குழுவினர் அளித்த அறிக்கை நீதிமன்ற வழக்கில் முக்கியமான ஆதாரமாக பின்னாளில் பயன்பட்டது.
2009 ஜூன் 30
பதினேழு ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை சமர்ப்பிப்பு. இதில் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, அசோக் சிங்கல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2010 செப்டம்பர். 30
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வி.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ‘கடவுள் பால ராமன் (ராம் லல்லா), நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு அளிக்க வேண்டும்; தற்காலிக ராமர் கோயில் அமைந்துள்ள முந்தைய கட்டிடத்தின் மைய இடம் ராம் லல்லாவுக்குச் சொந்தமானது’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
2011 மே 9
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று தரப்பினரும் மனுச் செய்ததால், அத்தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2014 மே 26
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது.
2017 மார்ச் 19
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் (பாஜக) பொறுப்பேற்பு
2017 ஆகஸ்ட்
ராமர் கோயில் நில உரிமை வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு விசாரணை துவக்கம்.
2019 ஜனவரி
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரணை துவக்கம்.
2019 மார்ச் 4– ஏப்ரல் 14
பரிஷத் அமைப்பால் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி நோக்கி ராமராஜ்ய யாத்திரை நடத்தப்பட்டது.
2019 மார்ச் 8
முன்னாள் நீதிபதி எஃப்.எம். கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
2019 ஆகஸ்ட். 2
சமரச முயற்சிகள் வெற்றி பெறவில்லை என, மூவர் குழு அறிக்கை தாக்கல்.
2019 ஆகஸ்ட். 6
அயோத்தி நில உரிமை வழக்கு விசாரணை, தினசரி அடிப்படையில் துவக்கம். ராம ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.பராசரன் வழக்காடினார்.
2019 அக்டோபர். 15
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வால் 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கு நிறைவு; தீர்ப்பு ஒத்திவைப்பு.
2019 நவம்பர். 9
உச்ச நீதிமன்றம் அயோத்தி நில உரிமை வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது. ‘சர்ச்சைக்கு உரியதாக இருந்த குறிப்பிட்ட 2..77 ஏக்கர் நிலமும் ராம் லல்லாவுக்கே சொந்தம்; அந்த இடத்தில் ராமர்கோயில் அமைக்க அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்; முஸ்லிம்கள் மசூதிகட்ட தனியே 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் அளிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
2020 பிப்ரவரி. 5
அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க, மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளையை அமைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2.77 ஏக்கர் நிலத்தையும், ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள 67.7 ஏக்கர் நிலத்தையும் கோயில் கட்ட அளிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
2020 ஜூலை 28
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் டில்லி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலங்கள் பதிவு நிறைவு.
2020 ஆகஸ்ட். 5
அயோத்தியில் பிரம்மாண்ட மான ராமர் கோயில் அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகியோர் பங்கேற்பு.
2020 செப்டம்பர் 30
சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி, சாக்ஷி மஹராஜ் உள்ளிட்ட 32 பேரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
2021 ஜனவரி. 15
ராமர் திருக்கோயிலை நாட்டு மக்கள் அனைவரது பங்களிப்புடன் மீண்டும் அமைப்பதற்காக ஸ்ரீ ராம ஜன்மபூமி ராமர் கோயில் நிதி சமர்ப்பண இயக்கம் துவங்கியது. நாடு முழுவதும் 400 இடங்களில் பரிஷத் நிர்வாகிகள் இப்பணியைத் துவக்கினர். ரூ. 2,000 கோடி செலவில் திருக்கோயிலை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.