மதம் பற்றிய ராஜமௌலியின் பார்வை

பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் நியூயார்க்கருக்கு பேட்டி அளித்தார். இந்த நேர்காணலில், எஸ்.எஸ். ராஜமௌலி திரைப்படங்கள், அவரது உத்வேகத்தின் ஆதாரங்கள், நம்பிக்கை தொடர்பான அவரது தேர்வுகள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். இருப்பினும், பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்ட இந்த நேர்காணலில், ‘மதம் என்பது அடிப்படையில் ஒரு வகையான சுரண்டல்’ என்று அவர் கூறிய ஒரு அறிக்கைக்காக அது கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த பேட்டியில் ராஜமௌலியிடம் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தால் அவரது படங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்று கேட்கப்பட்டது. பதிலளித்த அவர், “நான் சிறுவயதிலிருந்தே இந்தக் கதைகளைப் படித்திருக்கிறேன், ஆரம்பத்தில் அவை நல்ல, ஈர்க்கக்கூடிய கதைகளாக இருந்தன. நான் வளரத் தொடங்கியதும், உரையின் வெவ்வேறு பதிப்புகளைப் படித்தேன். மேலும் கதை எனக்கு மிகப் பெரியதாக உருவாகத் தொடங்கியது. கதாபாத்திரங்கள், கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் மோதல்கள், அவர்களின் தூண்டுதல் உணர்ச்சிகளை என்னால் பார்க்க முடிந்தது. நான் இந்த நூல்களை இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டு நேசிக்க ஆரம்பித்தேன். என்னில் இருந்து வெளிவரும் எதுவும் இந்த நூல்களால் எப்படியாவது பாதிக்கப்படுகிறது. அந்த நூல்கள் சமுத்திரங்களைப் போன்றது. ஒவ்வொரு முறையும் நான் அவற்றைப் பார்க்கும்போது, ​​நான் புதிதாக ஒன்றைக் காண்கிறேன்” என்றார்.

அடுத்த கேள்வியாக, எஸ்.எஸ்.ராஜமௌலியிடம், எப்போது அவர் தன்னை நாத்திகராக அடையாளம் காண்டார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “எங்கள்து குடும்பம் மிகப் பெரியது. என் அப்பா, அம்மா, உறவினர்கள், அத்தைகள் மாமாக்கள் என அனைவரும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள். எனக்கு நினைவிருக்கிறது, சிறுவயதில், ஹிந்துக் கடவுள்களைப் பற்றிய கதைகளைப் படித்த பிறகு எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது உண்மையாகத் தெரியவில்லை. பின்னர் எனது குடும்பத்தின் மத பழக்கத்தில் நானும் சிக்கிக்கொண்டேன். மத நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன், புனித யாத்திரைகள் செல்ல ஆரம்பித்தேன், காவி துணி அணிந்து, சில வருடங்கள் சன்னியாசியாக வாழ ஆரம்பித்தேன். பின்னர் நான் கிறித்தவம் மீது பிடிப்பு ஏற்பட்டது. நான் பைபிளைப் படிப்பேன், சர்ச்சுக்குப் போவேன். எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன். படிப்படியாக, இந்த விஷயங்கள் அனைத்தும் ‘மதம் என்பது அடிப்படையில் ஏதோ ஒரு வகையான சுரண்டல்’ என்பதை எனக்கு உணர்த்தியது.

என்னுடைய உறவினரின் (தெலுங்கு எழுத்தாளர் குன்னம் கங்கராஜூ) கீழ் சில மாதங்கள் பணிபுரிந்தேன். அவர் எனக்கு அய்ன் ராண்டின் ‘தி ஃபவுண்டன்ஹெட்’ மற்றும் ‘அட்லஸ் ஷ்ரக்ட்’ ஆகிய நூல்களை அறிமுகப்படுத்தினார். நான் அந்த நாவல்களைப் படித்தேன், அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவருடைய தத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால் அதன் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில்தான் நான் மெல்ல மெல்ல மதத்தை விட்டு விலக ஆரம்பித்தேன். ஆனால் அந்தக் காலத்திலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகள் மீதான என் காதல் குறையவே இல்லை. நான் அந்த நூல்களின் மத அம்சங்களிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினேன். ஆனால் என்னுடன் தங்கியிருப்பது அவற்றின் நாடகம் மற்றும் கதை சொல்லலின் சிக்கலான தன்மையும் மகத்துவமும்தான்.

கடவுளைப் பற்றிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். நான் மதத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்வதால் அவர்கள் (குடும்பத்தினர்) என்னைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார்கள். நான் கடவுளைப் பற்றி தவறாகப் பேசுவதில்லை. நான் அதை ஒருபோதும் செய்வதில்லை. நான் மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஏனென்றால், நிறைய பேர் கடவுளைச் சார்ந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், எனக்கு மதச் சடங்குகளிலோ, அப்படிப்பட்ட விஷயங்களிலோ நம்பிக்கை இல்லை என்று சொல்லும் போது என் அப்பா கோபித்துக் கொள்வார். இப்போது அவர் சமாதானமாகி எனது வாழ்க்கை முறையை மதிக்கிறார்” என கூறினார்.