இந்திய ரயில்வே தற்போது புதிய முயற்சி ஒன்றை சோதனை அடிப்படையில் முயற்சிக்க உள்ளது. அதன்படி, தனிநபர் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சரக்குகளை அவர்களின் முகவரிக்கே கொண்டு சென்று சேர்க்கும் டோர் டு டோர் டெலிவரி சேவை வசதி துவக்கப்பட்டுள்ளது. இந்திய தபால்துறை, சில தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் கூடிய இச்சேவை, ஜூன் மாதம் டெல்லியில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்கள் தங்கள் சரக்குகளைக் கண்காணிப்பதை எளிதாக்கும் வகையிலான கியு.ஆர் குறியீடு, கட்டணம், சரக்கு இருப்பிடம், அதனை கொண்டு சேர்க்கத் தேவைப்படும் நேரம் ஆகியவற்றை அறிய அலைபேசி செயலி, இணையதளம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை வழியாக சரக்குகளை கொண்டு செல்ல எடுக்கும் கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் இச்சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.