‘செயல்படு அல்லது வெளியேறு’ என்ற அடிப்படையில், இந்திய ரயில்வே கடந்த புதன்கிழமையன்று, 10 இணைச் செயலாளர் நிலை அதிகாரிகள் உட்பட 19 மூத்த அதிகாரிகளுக்கு முன்கூட்டிய ஓய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நேர்மையின்மை, திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரிகளை முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான முழு உரிமையை அரசாங்கத்திற்கு வழங்கும் சி.சி.எஸ் (The Central Civil Services (Conduct) Rules, 1964) விதிகளின் 56 (ஜே) வை பயன்படுத்தி இத்தனை மூத்த அதிகாரிகளை ஒரே நாளில் எந்த அரசு நிறுவனமும் இது வரை பணிநீக்கம் செய்ததில்லை. இது மிகப்பெரிய நடவடிக்கையாகும். கடந்த 11 மாதங்களில் திறமையின்மை, செயலின்மை, நேர்மையின்மை அடிப்படையில் 75 மூத்த அதிகாரிகள் தன்னார்வ ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்) எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்படி வி.ஆர்.எஸ் எடுத்த மூத்த அதிகாரி, ரயில்வே வாரிய உறுப்பினர் (டிராக்ஷன் மற்றும் ரோலிங் ஸ்டாக்) ராகுல் ஜெயின் ஆவார், அவருடைய விண்ணப்பம் இவ்வாண்டு ஜனவரியில் அங்கீகரிக்கப்பட்டது. 2016 ஜனவரியில் நடந்த பிரகதி கூட்டத்தில், தவறு செய்த மற்றும் திறமையற்ற அதிகாரிகளுக்கு வெளியேறும் கதவுகளை காட்டுவதற்காக, அனைத்து அரசு துறைகளையும் இந்த விதியை செயல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.