பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தபின் அடுத்த பிரிட்டன் பிரதமர் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் பாரத வம்சாவளியினருமான ரிஷி சுனக் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை லிஸ் டிரஸ் இந்த போட்டியில் முன்னணியில் இருந்தநிலையில் தற்போது ரிஷி சுனக் மீண்டும் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கு 43 சதவீத ஆதரவும், லிஸ் டிரஸ்ஸுக்கு 48 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. இதன் மூலம், ரிஷி சுனக்கை விட சிறிய அளவில் முன்னணியில் உள்ளார் லிஸ் டிரஸ் என்பது உறுதியாகியுள்ள நிலையில் இந்த வித்தியாசம் வரும் நாட்களில் இன்னும் குறைந்தால் ரிஷி சுனக்கிற்கு அடுத்த பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்புள்ளது. சுமார் 200,000 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் செப்டம்பர் 5ம் தேதி புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்களிக்க உள்ளனர். போட்டி இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை, கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த தேர்தலில் முக்கிய விஷயமாக அனைவராலும் பார்க்கப்படுவது அவர்கள் அளிக்கும் வரி குறித்த வாக்குறுதிகள், பணவீக்கத்தை சமாளிப்பதற்கும் சட்டவிரோத குடியேற்றத்தை கையாள்வதற்கும் தரும் வாக்குறுதிகள்தான். தான் பதவிக்கு வந்தால் பெரும் வரி குறைப்புக்களை செய்வேன் என டிரஸ் கூறிவரும் நிலையில், வரிகளை குறைக்கும் முன் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். கன்சர்வேடிவ் உறுப்பினர்களில் 60 சதவீதத்தினர், வரிகள் குறித்து ட்ரஸ் யோசனை சிறப்பாக உள்ளது. ஆனால், பணவீக்கத்தை சமாளிப்பதற்கும் குடியேற்றத்தை கையாள்வதற்கும் சுனக்கின் திட்டங்கள் சிறப்பாக உள்ளன என கருதுகின்றனர். மேலும், சுனக் அதிக நம்பிக்கை கொண்டவர், கல்வியில் சிறந்த கொள்கைகளை கொண்டிருப்பவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.