மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலர்கள் உள்ளிட்டோருடன் மெய்நிகர் வடிவில் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான பொது சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் தேசிய தடுப்பூசி இயக்கத்தின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு மேற்கொண்டார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் சமீபத்திய முடிவைச் செயல்படுத்துதல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தின் சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.