அக்னி 5 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து பாரதம் வெற்றிகரமாக சோதித்தது. கடந்த ஆண்டே நடத்தப்பட இருந்த இந்த சோதனை கொரோனா காரணமாக சற்று தள்ளிப்போனது. 5 ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னி 5 ஏவுகணை ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்தது. நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு 29,600 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது. 1.5 டன் எடையுள்ள அணுகுண்டு உள்ளிட்ட வெடிபொருளை கொண்டு செல்லக்கூடியது. இந்த நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்தகாலங்களில் போட்ட பல்வேறு முட்டுக்கட்டைகளை மீறி பாரதம் அக்னி 5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.