தமிழக அரசின் அபரிமிதமான மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விசைத்தறி உரிமையாளர்கள், ‘கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மின் கட்டண உயர்வால் சமாளிக்க முடியாத நெருக்கடி நிலைக்கு விசைத்தறித் தொழில் தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு, விசைத்தறி கூடங்களுக்கான மின் கட்டண உயர்வைஅரசு திரும்பப் பெறும் வரை மின்கட்டணம் செலுத்தாமல் போராடுவோம். சாதா விசைத்தறிக்கு ‘3ஏ2’-க்கு மிக அபரிமிதமாக உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 80 நாட்களுக்கும் மேலாக, மின் கட்டணம் செலுத்தாமல் போராடி வருகிறோம். தமிழக மின்துறை அமைச்சர், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் உட்பட அனைவரையும் நேரில் பல முறை சந்தித்து மனு அளித்தும் இதனை பரிசீலிக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதா விசைத்தறிக்கு பழைய நடைமுறையை வரும்காலங்களில் தொடர வேண்டும். உயர்த்திய மின் கட்டணத்தை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். தற்போது அனைத்து சிலாப்புகளுக்கும் 30 சதவீதம் மின் கட்டண உயர்வு, ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் கொள்கைகள், கூலிக்குநெசவு செய்யும் விசைத்தறி தொழிலை முழுமையாக அழித்துவிடும். இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். ‘3ஏ2’வுக்கு உயர்த்திய 30 சதவீத மின் கட்டணத்தையும், ஆண்டுக்கு 6 சதவீத மின்கட்டண உயர்வையும் முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.