கோயில்கள் இடிக்க தடை

உடுமலைப்பேட்டை தாலுகா, பள்ளப்பாளையத்தில் நூற்றாண்டு பழமையான கருவண்டராய சாமி கோயில் உள்ளது. எனினும், அது நுாறு ஆண்டு பழமை வாய்ந்தது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்களும் ஆவணங்களும் தற்போது இல்லை. இது பல பழமையான கோயில்களிலும் கோயில் நிலங்களிலும் சகஜம். அக்காலத்தில் குளங்கள், ஆறு, ஏரிகளின் கரைகளில் மக்கள் பல கோயில்களை கட்டினர். அவை அனைத்தும் தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள், அக்கால அரசர்கள் கோயிலுக்கு வழங்கிய நிலங்களாகவே இருக்கும். அக்கால மக்களுக்கு கோயில் கட்ட பிறர் நிலத்தையோ அரசு நிலத்தையோ அபகரிக்கும் நோக்கம் இருந்ததில்லை. கோயில் கட்டுவதும் அதற்கு கொடை அளிப்பதும் புண்ணியம் என்பதால் அனைவரும் நிலங்கள், தங்கம் என மனமுவந்தே தானம் அளித்தனர். அவற்றிற்கான ஆவணங்களை தற்காலத்தில் தேடி கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில், அக்காலத்தில் மக்கள் எழுத்தைவிட வாக்குக்கே முக்கியத்துவம் அளித்தனர். இந்நிலையில், கருவண்டராய சாமி கோயில் அமைந்துள்ள இடம், வருவாய் ஆவணங்களில் ‘செங்குள புறம்போக்கு’ என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை காரணமாகக் காட்டி கோயில் நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் தி.மு.க அரசு கோயிலை இடிக்க கிளம்பியது. ஏற்கனவே, இந்த நீர் நிலையை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டியிருப்பதாக கூறி வீடுகளை இடித்து விட்டனர் அரசு அதிகாரிகள்.. கோயிலை இடிக்க முயற்சித்தபோது கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், வேறு வழியின்றி கோயிலை இடிக்க, மீண்டும் வருவதாக கூறி சென்றனர். இதனையடுத்து உப்பிலிய நாயக்கர் மக்கள் சங்கத் தலைவர் என். கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயிலை இடிக்கக்கூடாது என மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பில் பதில் அளிக்க, கூறி விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு தடை விதித்தனர்.