நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, மரபுப்படி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “தேசம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது அமிர்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு வளர்ந்த நாடாக பாரதத்தை மாற்றுவதற்கான காலமாக அடுத்த 25 ஆண்டுகள் திகழ உள்ளன. வரும் 2047க்குள் வளர்ந்த நாடாக நாட்டை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். நமது கடந்த கால பெருமிதத்தை நவீனத்துடன் இணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.
நாம் உருவாக்க உள்ள பாரதம் தற்சார்பு கொண்டதாகவும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய பாரதத்தில் ஏழ்மை இருக்காது. நடுத்தர மக்கள் அனைவரும் அனைத்தையும் பெற்றிருப்பார்கள். இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நமது தேசத்தின் பன்முகத்தன்மை சிறப்பானது, துடிப்பானது. நமது நாட்டின் ஒற்றுமை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாதது.
வேலையே கடவுள் என்றார் பகவான் பசவேஷ்வரர். அதாவது, நாம் செய்யும் வேலையில் கடவுளும் இருக்கிறார். அவர் காட்டிய வழியில் கடமையை உணர்ந்து அரசு முழுமூச்சாக செயல்பட்டுக்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நிலையான அரசை தேர்ந்தெடுத்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அரசு, நாட்டின் நலனையே பிரதானமாகக் கருதி செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப கொள்கைகளையும் வியூகங்களையும் மாற்றி அமைத்துள்ளது.
துல்லிய தாக்குதல் முதல், பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் வரை, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முதல் அமலில் உள்ள உண்மையான எல்லை வரை, சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் நீக்கம் வரை, அரசு தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடியது என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நமது இந்த அரசு நிலையானது, அச்சமற்றது, தீர்க்கமானது, தேசத்தின் மிகப்பெரிய கனவுகளை நனவாக்க உழைக்கக்கூடியது. ஏழைகளை மேம்படுத்துவதை தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று நமது நாட்டின் நேர்மை உலக அளவில் மதிப்புக்குரியதாக உள்ளது.
அரசு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல்வேறு திட்டங்களைசு எளிதாக்கி மக்களிடம் கொண்டு சர்த்துள்ளது. கடந்த காலங்களில் வரி கட்டியவர்கள், தங்களது ரீஃபண்ட் நிதியை திரும்பப் பெறுவதுமிக நீண்ட செயலாக இருந்தது. தற்போது ஒருசில நாட்களில் அதனை திரும்பப் பெற முடிகிறது. வெளிப்படைத் தன்மையோடு, வரி செலுத்துபவர்களின் கண்ணியமும் இதன்மூலம் காக்கப்படுகிறது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்கள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளன. ஏழைகளின் சிரமங்களைப் போக்கும் நோக்கில் வீடு கட்டும் திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், மின்இணைப்பு வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இத்தகைய குடும்பங்களில் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வளருகிறார்கள். கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2014 முதல் நாள்தோறும் 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 2.5 லட்சம் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 55 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முத்ரா திட்டத்தின் கீழ் நாள்தோறும் 700 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 300 புதிய பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 2 கல்லூரிகள் உருவாகி வருகின்றன.
பாரதம் மிகப்பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. திருவள்ளுவர், ஆதிசங்கரர், குருநானக் ஆகியோரின் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. பாரதம் தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது. உலகமே பாரதத்தை எதிர்நோக்கி உள்ளது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை பாரதம் வழங்கி வருகிறது. பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றை பாரதம் கையாண்ட விதத்தை உலகமே பாராட்டியது.
ஜி.எஸ்.டி மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை நமது நாட்டிற்கான வரப்பிரசாதங்கள். நாட்டின் எல்லையோர கிராமங்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க, அரசு துடிப்பான கிராமங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளது. தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டுகளில் எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வளர்ச்சி வேகம் நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கல்வி கற்க வைப்போம். பிரச்சாரத்தின் வெற்றியை இன்று நான் காண்கிறோம். பெண்களின் ஆரோக்கியம் முன்பை விட மேம்பட்டுள்ளது. எந்தவொரு வேலையிலும், எந்த ஒரு துறையிலும் பெண்களுக்கு எவ்வித தடையும் இல்லை என்பதையும் அரசு உறுதி செய்துள்ளது” என தெரிவித்தார்.