இந்து முண்ணனி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க துவங்கியது முதலாகவே அடுக்கு மொழி பசப்பு வார்த்தைகள் பேசி மாணவர்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபமடைவதுதான் தி.மு.கவின் செயல்பாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களிடையே மொழி உணர்வை தூண்டி ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்தி ஹிந்தி மொழி படிக்க விடாமல் செய்ததும் மாநிலம் முழுக்க மொழி எதிர்ப்பையும் மொழி வாரி பிரிவினையையும் வளர்த்துவிட்டதுதான் தி.மு.கவின் ஒரே சாதனை இந்த கொடுஞ்செயலால் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய பன்மொழி புலமை அதன்மூலமான பல்வேறு உயர்கல்வி வேலைவாய்ப்புகள் தொடர்ந்து பறிபோனதுதான் வேதனையிலும் வேதனை. அதன் தொடர்ச்சியாக வசதி படைத்தவர்கள் தனியார் பாடசாலையில் ஹிந்தி படிப்பதை கண்டுகொள்ளாமல் அரசு பாடசாலைகளில், ஹிந்தி எதிர்ப்பை கடைபிடித்துகொண்டு ஏழை எளிய அடிதட்டு மாணவர்களின் கல்வியில் விளையாடுகிறது. இதன் தொடர்ச்சியாக மருத்துவகல்விக்கு நீட் தேர்வு அறிமுகமானதில் இருந்து அதை வைத்து இன்றளவும் அரசியல் விளையாட்டு விளையாடி வருகிறது. அதனால் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வதில் தேவையற்ற குழப்பமும், அலைகழிப்பும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஆட்சியில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கணிணி அறிவு மேம்பட விலையில்லா மடிக்கணினி திட்டம் செயல்படுத்தபட்டது. அதன் மூலம், ஏழை எளிய மற்றும் கிராமபுற மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட உதவியது. ஆனால் தி.மு.க அரசு மடிக்கணினிக்கு பதிலாக கைகணினி (டேப்) வழங்கபடும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்ட தொடரில் கல்விதுறைக்கான மானிய கோரிக்கையில் மடிக்கணினி வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடோ அல்லது இவர்கள் அறிவித்த கைகணினி வழங்குவதற்கான கொள்கை அறிவிப்போ இடம்பெறவில்லை. அந்த வகையில் மாணவர்களின் நலனை புறந்தள்ளி அரசியல் செய்வதுதான் தி.மு.கவின் வழக்கம் என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது. மாணவர்களின் நலத்திட்டங்களின் நிலை இப்படி என்றால் தமிழுக்கும் தமிழ்வழி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திராவிடமாடல் ஆட்சி என்று முழங்கிவிட்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயிரி தாவரவியல் (bio botany) பாடத்துக்கான கேள்விதாளில் 2 மதிப்பெண் பிரிவில் ஒளிசேர்க்கை சார் செயலாக்க கதிர்வீச்சு என்பதற்கு அதன் ஆங்கில வார்த்தையை சுருக்கமாக PAR (Photosynthetically active radiation) என கேள்வி கேட்கபட்டிருந்ததால் தமிழ்வழி மாணவர்களால் அந்த கேள்வியை புரிந்துகொள்ள இயலாமல் அனைத்து மாணவர்களூம் விடை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இதற்காக கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இவ்வாறாக தி.மு.கவின் திராவிட மாடல் அரசு, தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்து, தேர்வு பயத்தில் இருக்கும் மாணவர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி மாணவர்களின் வழ்க்கையோடு விளையாடி வருகிறது, உலகின் வேறு எந்த நாட்டிலும் நடக்காத துயரமாகும்” என தெரிவித்துள்ளார்.