தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளியின் மதமாற்றக் கொடுமையால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீதிகேட்டு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், ஹிந்து அமைப்புகள், ஏ.பி.வி.பி போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இவ்வழக்கை தமிழக அரசு மூடி மறைக்க முயன்றது. ஆனால், நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக சி.பி.ஐ இவ்வழக்கை தற்போது விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த பிப்ரவரி 14 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பாக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர்கள் அறவழியில் போராடினர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க அரசு, ஏ.பி.வி.பி தேசிய பொதுச்செயலர் நிதி திரிபாதி உள்ளிட்ட 32 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் தற்போது ஜாமினில் உள்ளனர். கைதான மாணவர்களை சிறையில் சந்தித்த அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர் சுப்பையாவையும் சஸ்பெண்ட் செய்தது. இது போதாதென்று போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, திருநெல்வேலி, சிவகங்கையில் தனியார் கல்லுாரிகளில் படித்து வரும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தேனி சட்டக் கல்லுாரி, நாமக்கல் அரசு கலை கல்லுாரியில் படித்து வரும் 2 மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஏ.பி.வி.பி தமிழக அமைப்பு செயலாளர் குமரசேன், ‘ஏ.பி.வி.பி மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளின்படி, ஜனநாயக வழியில் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதுபோன்ற போராட்டங்கள் மற்ற மாநிலங்களில் சகஜம். இதற்காக அவர்களை அரசு கைது செய்வது, கல்லுாரிகள் சஸ்பெண்ட் செய்வது என மாணவர்களின் எதிர்காலத்தோடு, அரசும், கல்லுாரி நிர்வாகமும் ஈடுபடுவது கவலை அளிக்கிறது. மாணவர்களுக்கு நீதி கிடைக்க சட்ட போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம்’ எண்று கூறினார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஏ.பி.வி.பி தேசிய நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.