திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘மத்திய அரசின் குடிநீர் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக குடிநீர் கிடைத்திடவும் பிரதமர் மோடி வழங்கும் திட்டங்கள் நேரடியாக கிடைத்திடவும் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்த்து பேசுவதுதான் தி.மு.க.,வின் வழக்கம். மத்திய அரசு திட்டத்தில் தங்களின் போட்டோ ஒட்டிக்கொள்வதில் இருக்கும் தி.மு.கவின் ஆர்வம், மத்திய அரசின் திட்டத்தை லஞ்சமின்றி பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்களில் 80 சதவீதம் மத்திய அரசுடையதுதான். தி.மு.க அரசின் திட்டங்கள் அல்ல. தி.மு.க தேர்தலுக்கு முன்பு சொன்னது ஒன்று, தற்போது செய்வது வேறு. ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வேட்புமனுக்களை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றனர்’ என பேசினார்.