பாடதிட்டத்தில் பாரதப் பிரிவினை

மக்களவை எம்.பி.யும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஹர்நாத் சிங் யாதவ், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத பாகிஸ்தான் பிரிவினையை பாட்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘வரலாற்றை மறப்பது, மறைப்பது நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு எவ்வகையிலும் மகிழ்ச்சியாக இருக்காது. வரலாற்றில் ஏன் இவ்வளவு பெரிய சோகம் நடந்தது, அதற்கு யார் பொறுப்பு, அப்பிரிவினையால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டது உள்ளிட்ட தகவல்கள் வரலாற்றின் பக்கங்களில் சேர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடுருவல்காரர்களால் வரலாற்றில் பாரதப் பெருமையை மறக்கடிக்கும் கல்வி புகுத்தப்பட்டது. ஆனால் உலக வரலாற்றில் 20 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட, 1 கோடி பேர் இடம் பெயர்ந்த இந்த மோசமான சம்பவம் மறக்கடிக்கப்பட்டது. அதிகாரபூர்வமான இந்த எண்ணிக்கையிவிட உண்மையான எண்ணிக்கை மிக அதிகம்’ என தெரிவித்திருந்தார். சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, இரக்கமற்ற வெறுப்பு, வன்முறை காரணமாக தங்கள் உயிரை இழந்தவர்களின் நினைவாக ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை நினைவு நாளாக என்று அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.