ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ

1975 ஜனவரி 10ம் தேதியன்று நடந்த கடற்படைக்கான தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் எஸ். ராமகிருஷ்ணன், இவருக்கு தலையைத்தவிர உடலின் எந்த உறுப்பும் இயங்காது. தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களைப் போக்க எண்ணி, 1981ல் அமர் சேவா சங்கத்தைத் தொடங்கி, கடந்த 38 வருடங்களாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஆவன செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள அவரது அமர்சேவா சங்கத்தில் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தங்கி பயின்று வருகின்றனர். எஸ். ராமகிருஷ்ணனின் மாபெரும் பொதுசேவையை பாராட்டி கௌரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தார்.