உக்ரைன் ரஷ்ய போருக்கு இடையே உக்ரைனில் சிக்கயுள்ள நமது குடிமக்களை திரும்ப அழைத்து வருவதற்காக மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ வை தொடங்கியது. உக்ரைனில் உள்ள பாரத தூதரகம், அண்டை நாடுகளில் உள்ள தூதரகங்கள் இரவு பகலாக வேலை செய்து மக்களை மீட்டன. தூதரகங்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு தனது 4 மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோரை முறையே ஹங்கேரி, ருமேனியா மற்றும் மால்டோவா, ஸ்லோவாக்கியா, போலந்து நாடுகளுக்கு அனுஒப்பியது. அவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’வை ஒருங்கிணைத்தனர். மாணவர்களை அழைத்து வரவும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்கவும் ராணுவ விமானம் மட்டுமில்லாது ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய தனியார் விமானங்களும் வாடகைக்கு பணியமர்த்தப்பட்டன. இந்நிலையில், மத்திய அரசின் அறிக்கைகளின்படி, உக்ரைனில் சிக்கித் தவித்த அனைத்து பாரத தேசத்தவரையும் வெளியேற்றும் பணி நேற்றுடன் (மார்ச் 10) நிறைவடைந்தது. கடைசி சிறப்பு விமானம் ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து புறப்படும். சுமி நகரில் சிக்கியிருந்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். உக்ரைனில் உள்ள பாரதத் தூதரகம், 600 மாணவர்களை சிறப்பு ரயில்களில் அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் போலந்துக்குச் செல்வார்கள். இன்று அங்கிருந்து பாரதம் புறப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. எனினும் பாரதத் தூதரக அதிகாரிகள் அங்கேயே தங்கியிருந்து உக்ரைனில் யாராவது சிக்கியுள்ளார்களா என தேடி கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.