தஞ்சாவூர் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு கோயில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம், சொகுசு பங்களா, நூற்பாலை ஆகியவை கட்டப்பட்டதாக வெங்கட்ராமன், ராதாகிருஷ்ணன் ஆகியோரால் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குளம் தூர்வாருதல், கோயில் மண்டபம் புதுப்பித்தல் என்ற பெயரில் மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத கட்டுமானம் நடைபெறுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சில வருடங்களில் உரிமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு விடுகின்றனர் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நிலத்தை கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று ஹிந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் தான் சம்பந்தப்பட்ட ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.