சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவையும் காந்தி ஜெயந்தியையும் முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) ‘சுதர்ஷன் பாரத் பரிக்கிரமா’ என்ற கார் பேரணியை டெல்லி செங்கோட்டையில் இருந்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார். அத்துடன், தண்டி, வடகிழக்கு பகுதி, லே, கன்னியாகுமரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 41 ஆயிரம் சைக்கிளில் பயணித்து, ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி டெல்லியில் உள்ள செங்கோட்டையை வந்தடைந்த ஆயிரம் மத்திய ஆயுதப்படைகளின் சைக்கிள் பேரணியையும் வரவேற்று அதனை நிறைவு செய்து வைத்தார். அப்போது பேசிய அமித்ஷா, ‘சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் நாட்டுக்காக சேவை செய்வது நமது கைகளில் உள்ளது. நாமும் நமது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக வாழலாம். இதற்காக எந்த தியாகமும் தேவையில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக நமது பங்களிப்பை அளித்தால் மட்டுமே போதும். நாட்டின் இளைஞர்கள், விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். உலக அரங்கில் பாரதம் தன்னிறைவு, பெருமையுடன் திகழும்’ என்றும் அவர் கூறினார். மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய், அஜய் குமார் மிஸ்ரா மற்றும் நிஷித் பிரமானிக், ராணுவ, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.