பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகள் அல்லது முன்னணிகள் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் விதத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபடுதல், அதற்கு நிதியளித்தல், கொடூரமாக கொலைகள் செய்தல் உள்பட நாட்டின் அரசியல் சட்ட அமைப்பை மதிக்காமல் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த அமைப்பின் கொடிய செயல்களை கட்டுப்படுத்துவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது இணைந்த அமைப்புகளான ரீஹேப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்.ஐ.எப்), கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா (சி.எப்.ஐ), அகில இந்திய இமாம்கள் கவுன்சில் (ஏ.ஐ.ஐ.சி), மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (என்.சி.எச்.ஆர்.ஓ), தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, எம்பவர் இந்தியா பவுண்டேஷன், கேரளாவில் உள்ள ரீஹேப் பவுண்டேஷன் உள்ளிட்ட முன்னணிகளை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவுகளின் கீழ் “சட்டவிரோத அமைப்புகளாக” அறிவித்துள்ளது. அவற்றுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தையும் மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் இந்த அமைப்பின் முகநூல், டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.